Kallakurichi Deaths: கள்ளச்சாராய மரணம்! ஆட்சியர்தான் காரணம்! வீடியோவை வெளியிட்ட ஈபிஎஸ்! பேரவையில் பரபரப்பு!
Kallakurichi Liquor Deaths: கள்ளக்குறிச்சியில் மக்கள் அதிகம் நடமாடும் அந்த பகுதியிலேயே கள்ளச்சாராயம் விற்பனை நடந்து உள்ளது எனில், உளவுத்துறை என்ன செய்து கொண்டு இருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து முதலில் விவாதிக்க கோரி அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளி செய்தனர். பின்னர் அவர்களை காவல் துறையினர் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
‘50 பேர் உயிரிழந்து உள்ளனர்’
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி நகரத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்து உள்ளது. பாண்டிச்சேரி ஜிம்பர் மருத்துவமனை, விழுப்புரம் அரசு பொது மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மருத்துவமனை, சேலம் அரசு பொது மருத்துவமனைகளில் 96 பேர் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வந்து உள்ளன. 146 பேர் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டதாகவும், அதில் 50 பேர் இறந்து உள்ளதாகவும், எஞ்சியவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. அதில் பலர் கவலைக்கிடமாகவும், பலருக்கு கண்பார்வை தெரியவில்லை என்றும் செய்திகள் வந்து உள்ளன.
எம்.எல்.ஏவாக இருக்கவே அர்த்தம் இல்லாமல் போய்விடும்
இது குறித்து சட்டமன்றத்தில் பேச பேரவை தலைவரிடம் அனுமதிகேட்டோம் ஆனால் பேரவை தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இது நாட்டையே உலுக்கும் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம். மக்கள் கொதித்து போய் இருக்கும் இந்த சம்பவம் குறித்து கூட சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு இல்லை என்றால் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.