DMK Vs ADMK: ‘கோட்டைசாமி எழுந்துரு! எடப்பாடி பழனிசாமியை கலாய்க்கும் சட்ட மந்திரி!’
வாழைப்பழ காமெடியை போல அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி! என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி விமர்சனம் செய்து உள்ளார்.
‘வாழைப்பழ காமெடியை’ போல அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறி உள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”43 மாத திமுக ஆட்சியை மக்கள் வெறுக்கின்றனர். வெள்ள பாதிப்பின்போது மக்கள் அமைச்சர்களை கேள்வி எழுப்பும் நிலைக்கு வந்து உள்ளனர். எப்போது இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்கின்றனர். ‘ஸ்டாலின்தான் வராரு, நீச்சல் அடிக்க விட்டுட்டாரு’ என மக்கள் விமர்சிக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்காததால் தென்பெண்ணை ஆற்றில் உள்ள சாத்தனூர் அணையை அறிவிப்பு தந்த உடனேயே திறந்துவிட்டுவிட்டனர். வரும் ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இந்த பயணத்தில் மக்களை சந்தித்து ஆட்சியின் அவலங்களை எடுத்து சொல்லுவோம். உங்களுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றிக் கொண்டு வருகிறேன். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? என கேள்வி எழுப்பினார்.”
சட்டத்துறை அமைச்சர் எதிர்வினை
இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியின் சமூக வலைத்தள பதிவில், கத்தி கத்தி பேசினால் போதாது; உண்மையைப் பேசுங்கள்! மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப் போல ‘வாழைப்பழ காமெடியை’ போல அறிக்கையிலும் சரி மேடையிலும் சரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர் பழனிசாமி! திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சமத்துவ-சமூக மேம்பாட்டு செயல்திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் மாண்புமிகு முதலமைச்சருக்கான சிம்மாசனத்தை அளித்திருக்கிறார்கள். குரலை உயர்த்தி கைகளைச் சுழற்றி பேசினால் மக்களை ஏய்த்து, திமுகவை வீழ்த்திவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் பழனிசாமி!
ஆட்சிக்காகவும் அதிகாரத்திற்காகவும் சசிகலா தொடங்கி, ஓபிஎஸ் வரை ஒவ்வொருவராக காலை வாரிவிட்ட நீண்ட துரோக வரலாறு உங்களுடையது! ஆட்சிக்காக பாஜகவிடம் அண்டிப் பிழைத்து மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடகு வைத்துவிட்டு இப்பொழுதும் கூட பாஜகவை எதற்குமே கண்டிக்காமல் ‘வலிக்காமல் வலியுறுத்திவிட்டு’ மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கும் மிஸ்டர் கோட்டைச்சாமியை யாராவது எழுப்பிவிடுங்கள்... என தெரிவித்து உள்ளார்.