DMK vs BJP: ’மற்றவர்கள் மீது பழி போடுவதுதான் மோடி பார்முலாவா?’ அமைச்சர் ரகுபதி சரமாரி கேள்வி!
”போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அண்ணாமலைக்கு வேண்டுமானால் தகவல் தெரிந்திருக்கும். அதை அவர் தெரியப்படுத்தியிருக்க வேண்டும்”

சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், போதைப்பொருட்களைத் தடுப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 10.08.2022 அன்று மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப்பொருளே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதற்கான நடவடிக்கையை எடுத்தார். கஞ்சா பயிரிடப்படாத பூமியாக உள்ளது தமிழ்நாடு.
பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுப் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. போதைப்பொருள் நடமாட்டம் இருந்தால் உடனடியாகத் தடுக்கப்பட்டு, காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சராக இருந்தவர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தந்துள்ளார். அப்படிப்பட்ட ஆட்சி அப்போது நடைபெற்றது.