அண்ணா பல்கலைக்கழக கொடூரம்.. FIR -ஐ ரகசியமாக பெற்று வெளியிட்டாரா அண்ணாமலை? .. அமைச்சர் ரகுபதி சொல்வது என்ன?
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவின் அடிப்படையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் குறைவாக உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (டிச.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "பத்திரிகை மற்றும் ஊடகங்களில் கைது செய்யப்பட்ட நபர் துணை முதலமைச்சருடன் இருப்பது போல புகைப்படம் போட்டுள்ளார்கள். அதை பார்த்தாலே தெரியும், துணை முதலமைச்சருக்கும் இந்த நபருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவர் நடந்து வரும் போது புகைப்படம் எடுத்துக்கொள்வதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களுடன் இருக்கும் போட்டோ. சைதாப்பேட்டை பகுதியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், பல நலத்திட்டங்களை வழங்க அமைச்சர் அந்த பகுதிகளுக்குச் சென்றுள்ளார். அப்படி ஒரு நிகழ்வில் அமைச்சருடன் அருகில் நின்று கைது செய்யப்பட்டவர் போட்டோ எடுத்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன். அதனால் இந்த வழக்கை மூடிமறைக்காமல் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு திமுக அரசு தண்டனை வாங்கி கொடுப்பதில் உறுதியாக உள்ளது.
இது ஒன்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போன்றது அல்ல. அன்று ஒரு முக்கிய பிரமுகரின் மகனே அந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார். அதனால் ஆட்சியாளர்களே அதனை மூடி மறைக்க முயற்சி செய்தார்கள். எதிர்கட்சி நடத்திய போராட்டத்தின் எதிரொலியாகத்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஒன்றும் யோக்கியமான கட்சி அல்ல. அவர்கள் அப்போது பொள்ளாச்சி சமப்வத்தை மூடி மறைக்க பார்த்தார்கள்.