"2026 இல் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!" கே.டி.ராஜேந்திர பாலாஜி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  "2026 இல் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!" கே.டி.ராஜேந்திர பாலாஜி

"2026 இல் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!" கே.டி.ராஜேந்திர பாலாஜி

Kathiravan V HT Tamil
Published Jun 10, 2025 04:09 PM IST

“கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது? எங்கே சொன்னார்கள்? யார் சொன்னா?”

 "2026 இல் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!" கே.டி.ராஜேந்திர பாலாஜி
"2026 இல் எடப்பாடி தலைமையில் அதிமுக ஆட்சிதான்; கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை!" கே.டி.ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அமையும் என்றும், கூட்டணி ஆட்சி எங்கும் சொல்லப்படவில்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது?

கூட்டணி ஆட்சி குறித்த தனது நிலைப்பாட்டை ஆவேசமாக வெளிப்படுத்திய அவர், "கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது? எங்கே சொன்னார்கள்? யார் சொன்னா?" என்று கேள்வியெழுப்பினார். மேலும், தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி அமைய இருப்பதை உறுதிபடத் தெரிவித்த அவர், "தமிழ்நாட்டில் எடப்பாடியார் ஆட்சி அண்ணா திமுக கூட்டணி ஆட்சி வரும்" என்றும் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை 

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சித்த ராஜேந்திர பாலாஜி, "நாம் வெற்றியுடைய இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். திமுக பதறுகிறது கை கால் உதறுகிறது. அடுத்த முறை 20 சீட்டுக்கு மேல் திமுக வெல்லாது. 2026 தேர்தலில் திமுக கூட்டணி 20 சீட்டுக்கு மேல வரக்கூடிய வாய்ப்பே கிடையாது" என்று தெரிவித்தார்.

எடப்பாடியார் உள்ள இடத்தில் மதவாதம் இருக்காது

தொடர்ந்து பேசிய ராஜேந்திர பாலாஜி, வெளியில் இருந்து அறிவுரை கூறுபவர்களையும், தங்கள் கூட்டணி குறித்து பேசுபவர்களையும் கடுமையாக சாடினார். "சில பேர் வெளியே இருந்து பேசுறார்கள். அவர் வரலாமா இவர் வரலாமா?, மதவாதம் வரலாமா? இனவாதம் வரலாமா? எங்களிடத்தில அறிவுரை சொல்வதற்கெல்லாம் உங்களுக்கு யோக்கியமே கிடையாது. எடப்பாடியார் இருக்கின்ற இடத்திலே மதவாதம் இருக்காது. மதவாதம் இருந்தால் அங்கு எடப்பாடியார் இருக்க மாட்டார். எங்களுக்கு நல்லதை சொல்லவதை போல எங்களுக்கு கெடுதல் செய்வதற்கு திட்டமிடுகிறார்கள்" என்று அவர் பேசினார்.

பிரபாகரன் உடன் ஒப்பீடு

அதிமுகவை ஆன்மீகத்தின் அடையாளமாகவும், எடப்பாடி பழனிசாமியை வீரத்தின் அடையாளமாகவும் உள்ளதாக கூறிய ராஜேந்திர பாலாஜி. "கிறிஸ்துவமாக இருந்தாலும் இந்துவாக இருந்தாலும் ஆன்மீகத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய ஒரே கட்சி அதிமுக. ஒரே தலைவன் எடப்பாடியார். இதுதான் நாடாள போகிற கூட்டணி. வீரத்தலைவர் பிரபாகரனுக்கு ஒப்பான வீரத்தை பெற்றவர் எங்கள் எடப்பாடியார்.எடுத்த முடிவை பின்வாங்காத எண்ணம் கொண்டவர். லட்சிய பிடிப்பை கொண்டவர். சமூக காவலாக இருக்கக்கூடியவர்" என ராஜேந்திர பாலாஜி பேசினார்.