கோட்டையை முற்றுகையிட வந்த மாற்றுத்திறனாளிகள் கோயம்பேட்டில் குண்டுக்கட்டாக கைது!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கோட்டையை முற்றுகையிட வந்த மாற்றுத்திறனாளிகள் கோயம்பேட்டில் குண்டுக்கட்டாக கைது!

கோட்டையை முற்றுகையிட வந்த மாற்றுத்திறனாளிகள் கோயம்பேட்டில் குண்டுக்கட்டாக கைது!

Kathiravan V HT Tamil
Published Apr 22, 2025 10:37 AM IST

ஆந்திர மாநிலத்தைப் போல, உடல் பாதிப்பின் தீவிரத்திற்கு ஏற்ப மாத உதவித்தொகையை 6,000 முதல் 15,000 ரூபாயாக உயர்த்தவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க கோரிக்கை

கோட்டையை முற்றுகையிட வந்த மாற்றுத்திறனாளிகள் கோயம்பேட்டில் குண்டுக்கட்டாக கைது!
கோட்டையை முற்றுகையிட வந்த மாற்றுத்திறனாளிகள் கோயம்பேட்டில் குண்டுக்கட்டாக கைது!

மாற்றுத்திறனாளிகள் குண்டுக்கட்டாக கைது

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர், உதவித்தொகையை உயர்த்த வலியுறுத்தி கோட்டை முற்றுகைப் போராட்டம் அறிவித்து, இன்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோயம்பேடு வந்தனர். ஆந்திர மாநிலத்தைப் போல, உடல் பாதிப்பின் தீவிரத்திற்கு ஏற்ப மாத உதவித்தொகையை 6,000 முதல் 15,000 ரூபாயாக உயர்த்தவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆனால், போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்து, பேருந்து நிலைய வளாகத்தில் கீழே படுத்து உருண்டு, கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள்

மாற்றுத்திறனாளிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகளில், தற்போது வழங்கப்படும் ரூ.1,500 உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தைப் போல ரூ.6,000-ஆக உயர்த்த வேண்டும், உதவித்தொகை நிறுத்தப்பட்ட சுமார் ஒரு லட்சம் பேருக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும், 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது வரம்பின்றி உதவித்தொகை வழங்க வேண்டும் ஆகியவை அடங்கும். மேலும், 60% ஊனமுடையவர்களுக்கு ரூ.6,000, 75% ஊனமுடையவர்களுக்கு ரூ.10,000, கடுமையான ஊனமுடையவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகையாக வழங்க வேண்டும் என்றும், 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

தர்மபுரியில் இடைமறிப்பு

முன்னதாக, தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட முயன்ற மாற்றுத்திறனாளிகளின் பேருந்தை காவல்துறையினர் இடைமறித்தனர். பேருந்தில் இருந்து இறங்க மறுத்த மாற்றுத்திறனாளிகள், "பலமுறை போராட்டம் நடத்தியும் அரசு எங்கள் கோரிக்கைகளை பரிசீலிக்கவில்லை. இதனால்தான் இந்தப் போராட்டத்திற்கு வந்துள்ளோம்," என்று தெரிவித்து அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைச்சரின் பதில்

இதுகுறித்து பேசிய சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், "மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. முதலமைச்சர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகள் இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு எடுப்போம்," என்றார். மேலும், "தமிழ்நாடு, 100 நாள் வேலைத்திட்டத்தில் ஒரு லட்சம் மாற்றுத்திறனாளிகளை பதிவு செய்து, இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. ஆனால், மத்திய அரசு இத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காததால் சில தொய்வுகள் ஏற்பட்டுள்ளன," என்று விளக்கினார்.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

"ஒன்றிய அரசு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது. முதலமைச்சர் இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகள் இதைப் புரிந்து, பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்தார்.