Kodai Summer Festival : கொடைக்கானலில் இன்று துவங்கியுள்ள கோடை விழாவில் சிறப்புகள் என்ன?
Kodaikannal Summer Festival : கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60வது மலர்க் கண்காட்சி இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழக மக்களுக்கு உள்ள பெஸ்ட் கோடை வாசஸ்தலம் என்றால், அது கொடைக்கானல்தான். கோடை ஆரம்பித்தாலே அங்கு மக்கள் கூட்டம் குவியத்துவங்கிவிடும். இங்குள்ள கோகர்ஸ் வாக், பிரியன்ட் பார்க், கொடைக்கானல் ஏரி, கரடி சோழா அருவி, பைன் பாரஸ்ட், குணா குகைகள், பில்லர் ராக், டால்பிஃன் நோஸ், ஃபயர் டவர், பெரிஜாம் லேக் என உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கூட்டம் குவிந்து கிடக்கும். பட்ஜெட் ஃபிரெண்லி என்பதாலும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கோடைக்காலத்தில் குவியும். தமிழர்களின் கோடைக்கால சொர்க்கம், கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை கவர்வதற்காக அரசும் பல்வேறு விழாக்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஆண்டுதோறும், கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை நடத்துகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் கோடை விழா மற்றும் 60வது மலர்க் கண்காட்சி இன்று முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஜூன் 2ம் தேதி வரை கோடை விழா நடைபெறுகிறது.
இவற்றை சுற்றுலாப்பயணிகள் கண்டு மகிழ ஏதுவாக மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, வெளிமாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் இன்று முதல் 28ம் தேதி வரை 3 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 26ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை 8 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக நடைபெறுகிறது.
மங்கள இசை, பரதம், தப்பாட்டம், ஒயிலாட்டம், தெம்மாங்கு இசை, பட்டிமன்றம், ஆடல்-பாடல், பலகுரல் நிகழ்ச்சி, இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
28ம் தேதி பட்டிமன்றம் நிகழ்ச்சியும், 30ம் தேதி படகு போட்டி நிகழ்ச்சியும், 31ம் தேதி கால்நடைத்துறை மூலம் நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
மேலும் கலைப்பண்பாட்டுத்துறை மூலம் தினமும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டுள்ளனர். கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியை முன்னிட்டு கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
டாபிக்ஸ்