Ramanathapuram: கடலாடியில் கண்டெடுக்கப்பட்ட 280 ஆண்டுகள் பழமையான சேதுபதி மன்னரின் செப்புபட்டையம்!
நாயக்கர் போல சேதுபதிகளும் தங்கள் நாட்டை பல பாளையங்களாக பிரித்து ஆண்டுள்ளனர். பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட இடம், ஊரை பிறருக்கு விற்கும்போது செப்புப்பட்டையம் நில ஆவணமாக வாங்கியவர்களிடம் வழங்கப்பட்டிருக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில், 280 ஆண்டுகளுக்கு முன்பு, சிவகுமார சேதுபதி ஆட்சியில், அவருடைய பாளையக்காரரான சாயல்குடி ஜமீந்தார், பிராமணருக்கு அக்கிரகாரம் ஏற்படுத்திக் கொடுத்த செப்புப்பட்டையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனது பெற்றோரிடம் ஒரு பழமையான செப்புப்பட்டையம் இருப்பதாக சென்னையில் இருக்கும் ஆதித்யா சம்பத்குமார், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவுக்கு கொடுத்த தகவலின் பேரில், கடலாடி பத்திரகாளியம்மன் கோயில் அருகிலுள்ள காந்தி நாடார், பாண்டீஸ்வரி இல்லத்தில் இருந்த பட்டையம் படித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: "600 கிராம் எடையும், 17.5 செ.மீ நீளமும், 30.5 செ.மீ அகலமும் கொண்ட பட்டையத்தில் 52 வரிகள் தமிழிலும், இரு வரிகள் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது. கைப்பிடியில் குமரன் துணை என உள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இதில் சக ஆண்டு 1667, கலியுகம் 4846, தமிழ் ஆண்டு குரோதன, வைகாசி 29-ம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1745. இதில் மன்னர் பெயர் ஸ்ரீகுமார முத்து விசைய ரகுனாதச் சேதுபதி என உள்ளது.