Pinarayi Vijayan: ’வடமாநிலங்கள் பலம் பெறும் தென் மாநிலங்கள் பலவீனமாகும்’ பினராயி விஜயன் எச்சரிக்கை!
மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எல்லை மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் பெருமளவு அதிகரிக்கும், அதேநேரம் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் கணிசமாகக் குறையும்.

மக்கள் தொகை குறைப்பை பாராட்டிய மத்திய அரசே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தண்டிக்கிறது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியவை:-
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இங்கு ஒன்றுகூடி உள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து, நமது அனைவரின் சார்பாக தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நம்மை அனைவரையும் ஒன்றிணைத்ததற்காக அவருக்கு நன்றி. லோக்சபா தொகுதிகளின் எல்லை மறுவரையறை என்ற வாள் நமது தலைமீது ஜனநாயகத்தின் அச்சுறுத்தலாகத் தொங்குகிறது.
தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்
பல்வேறு அறிக்கைகள் பாஜக தலைமையிலான மத்திய அரசு, எந்தவித ஆலோசனையும் இன்றி எல்லை மறுவரையறை செயல்முறையை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிடுகின்றன. இந்த திடீர் நகர்வு எந்த அரசியலமைப்பு கொள்கையாலோ அல்லது ஜனநாயக அவசியத்தாலோ உந்தப்படவில்லை, மாறாக குறுகிய அரசியல் நலன்களால் தூண்டப்படுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எல்லை மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் பெருமளவு அதிகரிக்கும், அதேநேரம் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் கணிசமாகக் குறையும்.