Tiruvannamalai Deepam 2024: கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலையில் மலையேற பக்தர்கள் தடை!
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் போது மலை மீது பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் போது மலை மீது பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்றைக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழு, மலையில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக தலைமை செயலாளர் தலைமையில் அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் ஆலோசனை நடைபெற்றது. அறிக்கையின் அடிப்படையில் அதிகமான மனிதர்களை மலை மீது ஏற்றக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்களுக்கு மலையேற அனுமதி மறுக்கப்பட உள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார் என தெரிவித்து உள்ளார்.
மலை மீது 350 கிலோ எடையுள்ள திரி, 40 டன் நெய் உள்ளிட்ட பிற பொருட்கள், எடுத்து செல்ல வேண்டியவர்களுக்கான உணவு, காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் உட்பட்டு உத்தரவு தரப்பட்டு உள்ளது. ஏற்கெனவே 4500 கிலோ நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து உள்ளோம். திருவண்ணமலையில் நேற்று நடைபெற்ற தேர் திருவிழாவில் மட்டும் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடி உள்ளனர். பக்தர்கள் வரும் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வசதிகளை செய்து வருகிறோம். கார்த்திகை தீபம் அன்று 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். வழக்கமாக கார்த்திகை தீபம் 2 ஆயிரத்து 500 பேர் வரை மலையேற அனுமதி தந்தோம். தற்போது தீபம் ஏற்றுவதற்கு உண்டான நபர்களை மட்டுமே மலையில் ஏற்றுவோம் என கூறினார்.
திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று பெய்த கனமழையால் மலைப்பகுதியில் இருந்து பாறாங்கல் ஒன்று குடியிருப்பு மீது விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
டாபிக்ஸ்