திமுக அரசுக்கு எதிராக திரும்பும் கார்த்தி சிதம்பரம், வேல்முருகன்! சவுக்கு சங்கர் வீடு சூறைக்கு குவியும் கண்டனங்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திமுக அரசுக்கு எதிராக திரும்பும் கார்த்தி சிதம்பரம், வேல்முருகன்! சவுக்கு சங்கர் வீடு சூறைக்கு குவியும் கண்டனங்கள்!

திமுக அரசுக்கு எதிராக திரும்பும் கார்த்தி சிதம்பரம், வேல்முருகன்! சவுக்கு சங்கர் வீடு சூறைக்கு குவியும் கண்டனங்கள்!

Kathiravan V HT Tamil
Published Mar 24, 2025 04:32 PM IST

மேலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

திமுக அரசுக்கு எதிராக திரும்பும் கார்த்தி சிதம்பரம், வேல்முருகன்! சவுக்கு சங்கர் வீடு சூறைக்கு குவியும் கண்டனங்கள்!
திமுக அரசுக்கு எதிராக திரும்பும் கார்த்தி சிதம்பரம், வேல்முருகன்! சவுக்கு சங்கர் வீடு சூறைக்கு குவியும் கண்டனங்கள்!

சவுக்கு சங்கர் வீடு சூறை

சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனது தாயார் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டில் புகுந்து சூறையாடியதாக வீடியோவை தனது ’எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர். 9.30 மணி முதல் இது வரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை.” என பதிவிட்டு இருந்தார்.

சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேலும் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் மற்றும் தவாக தலைவர் வேல்முருகன் ஆகியோரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்க மற்றும் கொடூரமான தாக்குதல். காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், இல்லையெனில் அது பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் சிதைத்துவிடும்.

டிடிவி தினகரன், அமமுக பொதுச்செயலாளர்

திரு.சவுக்கு சங்கர் அவர்களின் இல்லத்தில் அரங்கேறியிருக்கும் திட்டமிட்ட வன்முறை அநாகரீகத்தின் உச்சம் - புகார் அளித்த பின்பும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.

இன்று திரு.சவுக்கு சங்கர் மீதும், அவரது தாயார் மீதும் வன்முறையை ஏவி விட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

தி.வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி

ஊடகவியலாளர் திரு.சவுக்கு சங்கர். அவர்களின் வீட்டிற்குள் துப்புரவு பணியாளர்கள் என்கின்ற பெயரில் புகுந்த ரவுடிகள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியும், வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியும்,கழிவு நீரை வீடு முழுதும் ஊற்றியும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர் இது வன்மையான கண்டனத்துக்குரியது. ஜனநாயக நாட்டில் அவர் முன்வைக்கும் கருத்துக்களின் மீது யாருக்கு வேண்டுமானாலும் மாற்றுக் கருத்து இருக்கலாம் அதனை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமேயொழிய இது போன்று வன்முறையில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல. இந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருப்பினும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென்று தமிழ்நாடு அரசசையும் தமிழ்நாடு காவல்துறையையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சி

ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் அவர்களின் வீட்டிற்கு சென்று அவரது தாயாரை ஆபாச வார்த்தைகளை பேசி கொலை மிரட்டல் விடுத்ததோடு வீடு முழுக்க மலத்தை அள்ளி வீசி அராஜகம் செய்துள்ளனர். துப்பரவு தொழிலாளர்களை சவுக்கு சங்கர் தவறாக பேசியிருந்தால் காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதுதானே சரி ! அதை விடுத்து வீட்டிற்கு சென்று மலத்தை அள்ளி வீசுவது அப்பட்டமான கொடும்செயல் !