Kanda sashti festival: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kanda Sashti Festival: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

Kanda sashti festival: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

Karthikeyan S HT Tamil
Oct 25, 2022 09:00 PM IST

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

திருச்செந்தூர் முருகன் கோயில்.
திருச்செந்தூர் முருகன் கோயில்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக பக்தர்கள் இன்றி கந்த சஷ்டி விழா நடைபெற்றது.

இந்நிலையில், இந்தாண்டு கந்த சஷ்டி விழா இன்று (அக்.25) யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. காலை 7.30 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. கோயிலில் உள்பிரகாரத்தில் ஜெயந்திநாதருக்கு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 12.30 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

கந்த சஷ்டி திருவிழாவின் முதல் நாளான இன்று சூரிய கிரகணம் ஏற்பட்டதால் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தது. பின்னர் 6.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 30ஆம் தேதி மாலை 4 மணிக்கு கடற்கரையில் வைத்து நடைபெறுகிறது. இதில், வீர வாளுடன் எழுந்தருளும் முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். 31ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் கந்த சஷ்டி விழா நிறைவுபெறுகிறது. கந்த சஷ்டி விழாவுக்கு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கோயில் வளாகத்தில் தற்காலிக கூரை அமைக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வெளி நாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.