DMK vs MNM: 'மக்களவைத் தேர்தலில் கமலின் கட்சிக்கு சீட் கிடையாது'.. கடைசியில் திமுக கொடுத்த டுவிஸ்ட் இதுதான்!
Kamalhassan vs DMK, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Lok Sabha Election 2024: திமுக தலைமையிலான கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாகவே செய்திகள் உலாவி வந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வெளிப்படுத்தி இருந்தார்.
தொடர்ந்து திமுக உடன் மக்கள் நீதி மய்யம் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து திமுக கூட்டணியில் மக்கள் நீதிமய்யம் கட்சி இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.