மாநிலங்களவைத் தேர்தல்: கமல்ஹாசன் மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு!
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதி உடன் முடிவடைய உள்ள நிலையில், ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் கமல்ஹாசன் மற்றும் 3 திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24, 2025-உடன் முடிவடைய உள்ள நிலையில், ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, திமுக கூட்டணி சார்பில் நான்கு வேட்பாளர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை இணைச் செயலாளர் சுப்பிரமணியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் இரண்டு வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர்.
திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி
திமுக சார்பில் வழக்கறிஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மையத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு, அதன் தலைவர் கமல்ஹாசன் வேட்பாளராக நியமிக்கப்பட்டார். இவர்கள் அனைவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.