தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Judicial Remand Extended For Ex Minister Senthil Balaji On April 15, 2024

Senthil Balaji: செந்தில் பாலாஜியின் காவல் மீண்டும் நீட்டிப்பு..கோர்ட் அதிரடி உத்தரவு..இது எத்தனையாவது முறை தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Apr 04, 2024 04:22 PM IST

Senthil Balaji Case: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மீண்டும் நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

ட்ரெண்டிங் செய்திகள்

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த விசாரணை முடிந்த பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், நீதிமன்றக் காவலில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஏப்ரல் 04) முடிவடைந்தது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 31-வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்தாலும் அவர் பல மாதங்கள் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்ந்து வந்தார். இது தொடர்பாக நீதிமன்றம் சில கருத்துகளைக் தெரிவித்திருந்த நிலையில், கடந்த மாதம் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். இதற்கிடையில் செந்தில் பாலாஜி தரப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தது. ஜாமீன் வழங்க எந்தவொரு நிபந்தனையும் ஏற்க தயார் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தருவது குறித்து வரும் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ள நிலையில் சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தச் சூழலில் தான் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (ஏப்ரல் 04) முடிவடைந்துள்ளது. இதையடுத்து புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 31-வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்