எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா! செங்கோட்டையன், தங்கமணி புறக்கணிப்பு!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. அவர் தற்போது அவருடைய சொந்த தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
செங்கோட்டையன் புறக்கணிப்பு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தங்கமணி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை.
அவர் தற்போது அவருடைய சொந்த தொகுதியான கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
விளையாட்டு பிரிவு அணி உருவாக்கம்
இன்று நடந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றன. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு விழா மலரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுகவில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மாணவர் அணி, மருத்துவர் அணி, விவசாயிகள் அணி, நெசவாளர் அணி, மீனவர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகள் உள்ளது.
இந்த நிலையில் கூடுதலாக விளையாட்டு வீரர்களுக்கான ஒரு பிரிவு தனியாக அதிமுகவில் உருவாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு அதிமுக பொதுக்குழுவில் வெளியிடப்பட்டலும், இதுவரை அந்த அணி அதிகாரப்பூர்வமாக செயல்பட வில்லை. ஜெயலலிதா பிறந்தநாளான இன்று விளையாட்டு பிரிவை உருவாக்கி அதற்கென நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்க வேண்டும் என அதிமுக தலைமை தெரிவித்து உள்ளது.
