Modi About Jayalalitha: எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் நல்லாட்சி தந்தார்!’ பல்லடத்தில் மோடி பேச்சு!
”தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதால் எதிர்க்கட்சிகள் அனைவரும் என் மீது கடும் கோபத்தில் உள்ளனர்”

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் மாதப்பூரில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தமிழ்நாட்டுக்கு வந்த போது மரியாதைக்குரிய எம்ஜிஆர் என் நினைவுக்கு வந்தார். நான் இலங்கைக்கு சென்றபோது அவர் பிறந்த ஊரான கண்டிக்கு சென்றுள்ளேன்.
நல்லாட்சி நடத்தியதன் மூலம் தரமான கல்வி, சுகாதாரத்தை தமிழக மக்களுக்கு தந்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் அவரை மதித்தார்கள். ஏழை மக்கள் அனைவரும் ஒப்பற்ற தலைவராக மக்களை புகழ்ந்து வருகின்றனர். குடும்ப ஆட்சி நடத்த எம்ஜிஆர் ஆட்சிக்கு வரவில்லை, திமுக எம்ஜிஆரை அவதூறு செய்கிறது.
இன்றைக்கு திமுகவால் தமிழ்நாட்டில் எம்ஜிஆரை கேவலப்படுத்தும் ஆட்சி நடந்து வருகிறார். எம்ஜிஆருக்கு பிறகு தமிழ்நாட்டில் நல்லாட்சி கொடுத்தவர் அம்மா ஜெயலலிதாதான் என்பதை என்னால் சொல்ல முடியும். அவருக்கு இந்த மண்ணில் இருந்து மீண்டும் அஞ்சலியை செலுத்துகிறேன். ஜெயலலிதா அவர்களுடன் பல்லாண்டு காலம் நெருங்கி பணியாற்றி உள்ளேன். எம்ஜிஆர் கொள்கைகளை கடைபிடித்து அவர் மக்கள் வளர்ச்சிக்கு பணியாற்றியதால்தான் ஜெயலலிதாவை அனைத்து வீடுகளிலும் நினைவுக்கூர்ந்து வருகிறார்கள்.
இந்தி கூட்டணி தமிழ்நாட்டை கைப்பற்றிவிட்டால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை அனுமதிக்கவிடமாட்டார்கள். நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்ற காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இராணுவ காரிடார் அமைய அனுமதிக்குமா?, விருதுநகரில் பிஎம் ஜவுளி பூங்கா மூலம் பலருக்கு வேலை கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. முத்ரா கடன் திட்டம் மூலம் 2 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி தரப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் சாத்தியம் ஆகுமா?
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதால் எதிர்க்கட்சிகள் அனைவரும் என் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்தி கூட்டணி ஜெயிக்காது என்பது தெரிந்துவிட்டது, ஆனால் தமிழ்நாட்டில் ஜெயிக்கலாம் என இந்தி கூட்டணி நினைக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் நடந்த என் மண் என் மக்கள் யாத்திரை இதற்கு பூட்டுப்போடுவதாக அமையும். மீண்டும் பாஜக ஆட்சி அமைய பாஜக தொண்டர்கள் வீடுவீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். இளைஞர்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் மோடியின் உத்தரவாதம் இருந்து உள்ளது.
