Drugs Smuggling Case: ரூ.2,000 கோடி போதைப் பொருள் கடத்தல் வழக்கு.. ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது!
Jaffer Sadiq: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.2000 கோடி மதிப்பிலான சூடோபெட்ரைன் என்ற போதைப்பொருளை கடத்தியதாக போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ஜாஃபர் சாதிக் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில், போதைப்பொருள் கடத்தலு்ககு மூளையாக செயல்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சட்ட விரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக இந்த வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். உணவுப் பொருட்களுடன் போதைப்பொருளை கலந்து அனுப்பி கடத்த உதவிய சதா என்பவரை சென்னையி்ல வைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 5 ஆவது நபராக சதா கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கின் பின்னணி என்ன?
இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர், திராட்சை, உலர் பழங்கள் மற்றும் ஹெல்த் மிக்ஸ் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து மெதம்பெடமைன் எனும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் முக்கிய வேதிப்பொருளான சூடோபெட்ரின் சர்வதேச நாடுகளுக்கு கடத்தப்படுவதாக, டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேற்கு டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் கடந்த 15ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் டெல்லி போலீசாரும் சோதனை செய்தனர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ வேதிப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டு வந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஜாபர் சாதிக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சாந்தோமில் உள்ள அவரது வீட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி சம்மன் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி வீட்டுக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாபர் சாதிக், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
இதற்கிடையில், தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் கடந்த 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கை கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 7 நாட்கள் காவலில் எடுத்து அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்தநிலையில் தான் ஜாபர் சாதிக்கின் கூட்டாளி சதா என்பவரை இன்று சென்னையில் வைத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ரூ.2,000 கோடி சூடோபெட்ரைன் என்ற போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்