Karur IT Raids: லேப்டாப் முதல் ஐபாட் வரை! செந்தில் பாலாஜி தம்பி வீட்டில் சிக்கிய பொருட்கள்?
மற்ற இடங்களில் தொடர்ந்து வருமானவரி சோதனை நடந்து வருகிறது
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தினர்.
சோதனையிட வந்த அதிகாரிகளை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தியது, வருமானவரித்துறை அதிகாரிகள் வந்த கார்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எனது வீட்டில் ரெய்டு நடக்கவில்லை எனது தம்பிக்கும், அவருடையை தொடர்புடையவர்களின் இடத்திலும் சோதனை நடப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்திருந்தார். மேலும் கடந்த 2006ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை என அவர் கூறி இருந்தார்.
ரெய்டு குறித்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. ”பாஜக மாநிலத் தலைவர் அண்ணானலை, பாஜக என்றால் என்ன அதன் அதிகாரம் என்ன என்பதை எல்லாம் இன்னும் 10 நாளில் செந்தில் பாலாஜி சந்திப்பார்’ என்று சொன்னார். 2022 ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கத்துறை பிசியாக உள்ளது, பின்னர் செந்தில் பாலாஜி மீது ரெய்டு நடக்குமென்று சொன்னார்.
அவரை குறிவைக்க காரணம் என்னவெனில் கோவை, கரூர் மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்தார். எனவே அவரை முடக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை திட்டமிட்டு செய்துள்ளார்.” என குற்றம்சாட்டி இருந்தார்.
ரெய்டு தொடங்கிய பிற்பகல் நேரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கிற்கு தொடர்புடைய மேலும் மூன்று இடங்களில் கூடுதலாக வருமானவரித்துறை சோதனை தொடங்கியது.
இந்த நிலையில், சென்னை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் இல்லத்தில் நடைபெற்ற வருமானவரி சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையின் முடிவில் ஒரு லேப்டாப் மற்றும் ஒரு ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவரது வீட்டில் 30,000 வைக்கப்பட்டிருந்த லாக்கருக்கும் அதிகாரிகள் சீல் வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்ற இடங்களில் தொடர்ந்து வருமானவரி சோதனை நடந்து வருகிறது.