Senthil Balaji: முதலமைச்சரின் 'முதல்' அமைச்சரா செந்தில் பாலாஜி? கடந்து வந்த பாதை இதோ!
Senthil Balaji: திமுகவின் ஒரு முக்கிய புள்ளியாகவே வலம் வரும் செந்தில் பாலாஜி மின்சார துறையை தன் வசப்படுத்தினார்.
வே. செந்தில்குமார் என்னும் இயற்பெயரை உடைய வே. செந்தில் பாலாஜி, கரூர் மாவட்டத்தில் கரூருக்கு அருகே உள்ள ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தார். நியூமராலஜி மீதான நம்பிக்கையால் தன் பெயரை செந்தில் பாலாஜி என்று மாற்றிக்கொண்டார்.
கல்வி
தொடக்கக்கல்வியை ராமேஸ்வரப்பட்டி தொடக்க பள்ளியிலும், பின்னர் மேல்நிலை கல்வியை கரூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார்.
பின்னர் கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தார். அரசியல் ஆர்வத்தின் காரணமாக அப்படிப்பை 16.4.1995ஆம் நாள் இடைநிறுத்தம் செய்துவிட்டார்
அரசியல்
தனது பட்டப்படிப்பை 1995ஆம் ஆண்டில் இடைநிறுத்தம் செய்த செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். பின்னர் 1996 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து 2000 மார்ச் 13ஆம் நாள் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அவர் முன்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்த 6 மாதத்தில் அதிமுக மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ஆனார். பின் 2004ல் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆனார். 2006ல் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் என அடுத்தடுத்து பொறுப்புகள் கிடைத்தது.
இந்நிலையில் திமுக ஆட்சியில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம் அதிமுக மேலிடத்தில் செந்தில் பாலாஜிக்கு செல்வாக்கை பெற்று தந்தது.
2011 சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015ல் முறைகேடாக பணம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சர் பதவியும் கரூர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இதையடுத்து 2016ல் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பட்டியலில் செந்தில் பாலாஜியின் பெயரும் இடம்பெற்றது. ஆனாலும் சசிக்கலாவின் மீது இருந்த நம்பிக்கையால் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
பின்னர் தன் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுகவில் இணைந்தார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து 2021ம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் கரூர் தொகுதி பக்கம் திரும்பினார். முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கரை எதிர்த்து போட்டியிட்டு 12000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து தற்போது திமுகவின் ஒரு முக்கிய புள்ளியாகவும் தமிழக முதல்வரின் நம்பிக்கையை பெற்றவர்களில் முக்கிய அமைச்சராகவும் வலம் வரும் செந்தில் பாலாஜி மின்சார துறையை தன் வசப்படுத்தினார். மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராகவும் உள்ளார்.
பணமோசடி புகார்
இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சர் ஆக இருந்த செந்தில் பாலாஜி , போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக புகார் இருந்தது. இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் சென்னை, கரூர், கோவை உட்பட அவர் தொடர்புடைய 40 இடங்களில் சுமார் 300 அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.