பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? கொளத்தூர் மணி சொன்ன பதில்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? கொளத்தூர் மணி சொன்ன பதில்!

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? கொளத்தூர் மணி சொன்ன பதில்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 13, 2023 06:11 PM IST

87ம் ஆண்டு போடப்பட்ட 13 வது சட்ட திருத்த ஒப்பந்தத்தை இப்பொழுதும் பாஜகவினர் பேசுகிறார்கள். இது சர்வ ரோக நிவாரணி போல கட்டமைக்கின்றனர்.

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி

இதுகுறித்து திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருக்கிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி, முழுமையான தகவல்கள் அவர்களிடம் பேசும் பொழுது தான் தெரிய வரும். 2009 ல் முள்ளிவாய்க்கால் போர் முடிந்த பொழுது அவர் இருக்கிறாரா? இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து மகிழ்ச்சியளிக்கும் செய்தியை நெடுமாறன் கொடுத்திருக்கிறார். அவர் தொடர்பில் இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.

இப்போதைய சூழலில் அவர் வந்திருப்பது தமிழீழ மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும். ஈழத்தில் விடுதலை புலி ஆதரவாளர்களிடையே பல விதமான கருத்துக்கள் இருக்கும் நிலையில், இந்த தகவல் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இயங்க கூடிய சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. இனி ராணுவ நடவடிக்கைக்கான வாய்ப்புகள் குறைவு, அப்படியே முயற்சி எடுத்தாலும் இனி இராணுவ பயிற்சி அளிப்பது, நவீன ஆயுதங்களை வாங்குவது என்பதெல்லாம் கடினம். அரசியல் நடவடிக்கைகள் தான் சாதகம், அதுவே சாத்தியமான ஒன்றாக பார்க்கிறேன். உலக நாடுகள் மத்தியில் தங்களுக்கான ஆதரவை திரட்டுவதன் வழியாக ஈழத்திற்கான விடுதலையை, விரும்புகிற தீர்வை பெற முயற்சி மேற்கொள்ள முடியும். பிரபாகரனின் வரவு நிச்சயமாக இந்த தீர்வை நோக்கி செல்ல பயன்படும்.

தமிழர்கள் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வெறுப்பு இருக்கலாம். சிங்கள மக்களுக்கு இல்லை இதை அரசுகள் எப்படி பயன்படுத்த போகிறது என்பதை பார்க்க வேண்டும். ஈழ விவகாரத்திற்கு பொதுவாக்கெடுப்பு மட்டுமே இப்பொழுது சாத்தியமான ஒன்று. முள்ளிவாய்க்கால் துயரம் நடக்க காரணமானவர்களை, அதில் நடந்த அத்துமீறல்கள் குறித்தும் அரசியல் கைதிகள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை, இவற்றில் உலக நாடுகள் தலையிட வேண்டும், இந்த இரண்டு நடவடிக்கைகளுக்கும் இப்போது விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் வரவு வழிவகுக்கும் என நம்புகிறோம். இதையும் அவர்களிடம் பேசித்தான் உறுதிப்படுத்த வேண்டும். பிரபாகரன் குறித்து ஊடகம் வழியாக பார்த்த பொழுது மகிழ்ச்சியாக இருந்தது, எதிர்பார்த்த தகவல் தான் இது. இதையும் அவர்களிடம் பேசித்தான் உறுதிப்படுத்த வேண்டும். தமிழ் மக்களிடம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

பாஜக தலைவர்கள் இலங்கை சென்று வந்தது என்பது அதிகபட்சம் அங்குள்ள சிங்கள அரசுக்கு ஆதரவாகவும், தொழிலதிபர்களுக்கு வாய்ப்பு தேடித் தருவதற்கும்தான். பாஜகவினர் இலங்கையை அரசியலில் தலையிட முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் தமிழகத்தில் தங்கள் செல்வாக்கை உயர்த்த ஈழத் தமிழர்களுக்கு உழைக்கிறோம் என்ற பிம்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வார்கள். அண்மை காலத்தில் பா.ஜ.க தலைவர்கள் அடிக்கடி இலங்கை சென்று வந்து இருப்பதை பார்க்க முடிகிறது. இலங்கையில் 13-வது சட்ட திருத்தம் என்பதை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை, தமிழீழ மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதில் மாகாண கவுன்சிலுக்கு நில அதிகாரம், காவல் அதிகாரம் கிடையாது எனவும் தெரிவித்தார். 87ம் ஆண்டு போடப்பட்ட 13 வது சட்ட திருத்த ஒப்பந்தத்தை இப்பொழுதும் பாஜகவினர் பேசுகிறார்கள். இது சர்வ ரோக நிவாரணி போல கட்டமைக்கின்றனர்.

அதேசமயம் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் எந்த மாதிரியான உணர்வை ஏற்படுத்தும் என தெரியாது, ஆனால் இதை சிங்கள ஆட்சியாளர்கள் பயன்படுத்திக்கொண்டு தடையை நீடிப்பதற்கும், தமிழர் பகுதியில் ராணுவத்தை பலப்படுத்தவும் உதவும். பயங்கரவாத தடை சட்டத்தை நீடிக்க உதவும். அரசியல் கைதிகளை வெளியில் விடாமல் வைத்திருக்கவும் உதவும். புலிகள் எப்பொழுதும் இந்தியாவிற்கு எதிராக இருந்ததில்லை, தமிழக அரசியலிலும், இந்திய அரசியலும் தலையிட்டதில்லை.

புலிகளின் வாரிசு என்று சொல்பவர்கள் புலிகளின் கருத்தை போல சில செய்திகளை சொல்வார்கள், இப்போது பிரபாகரனின் வருகை என்ற தகவல் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.

விடுதலைப்புலிகள் குறித்து தவறான தகவல்கள் நிறைய தலைவர்கள் சொல்லி வந்தார்கள், இப்பொழுது அவர் வெளியே வருவது தங்களுக்கு ஆபத்து என இனி கதையை கூட மாற்றி பேச வாய்ப்புண்டு எனவும், ஆனால் அது ஒரு சாதாரண கூட்டத்தினுடைய கருத்து" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் அறிவித்திருந்த நிலையில், இதை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.