தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Is It Right To Point Out The Flaws In The Corona Virus Issue And Not Change?

Corona Updates: குறைகளை சுட்டிக்காட்டியும், திருந்தாமல் இருப்பது சரியா?

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 29, 2023 02:19 PM IST

2 தினங்களுக்கு முன் 3199 பேரை பரிசோதித்து 99 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியான நிலையில்,மறு நாள் பரிசோதனைகளை அதிகரிக்காமல்,குறைத்து 2888 பேருக்கு மட்டுமே பரிசோதித்து 102 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று 102 பேர் என இருந்தது இன்று 105 என உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வலியுறுத்தி, சுகாதாரச் செயலாளர்களுக்கு வழிகாட்டுதல் கடிதத்தை அனுப்பியுள்ளது.

தமிழக அரசு அதை மதிக்காமல் பரிசோதனைகளைக் கூட்டாமல் (இரு தினங்களுக்கு முன் 3199 பேரை பரிசோதித்து 99 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியான நிலையில்,மறு நாள் பரிசோதனைகளை அதிகரிக்காமல்,குறைத்து 2888 பேருக்கு மட்டுமே பரிசோதித்து 102 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 

இது எப்படி சரியான நடைமுறை ஆகும்?

இன்று பாதிப்பு 105 என மேலும் கூடிய நிலையில் எத்தனை பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது என்ற விபரத்தை தமிழக சுகாதாரத்துறை பொதுவெளியில் வைக்காமல் இருப்பது எப்படி சரியாகும்?

சில ஊடகத்தில் அனைத்து மாவட்ட கொரோனா பாதிப்பிற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது எனும் மாயத் தோற்றத்தை உருவாக்கவா?

ஆளுங்கட்சி பத்திரிக்கை ஒன்றில் அகில இந்திய கொரோனா பாதிப்பு செய்தி வெளிவந்தும் தமிழக பாதிப்பு குறித்தான புள்ளிவிபரம் இல்லை. 

திரும்பவும் தமிழக முதல்வரின் கருத்தை மேற்கோள் காட்ட வேண்டிய தேவை உள்ளது.-"எது முறையாக அளக்கப்படுகிறதோ, அதில் மட்டுமே மாற்றம் தெரிகிறது."

தமிழக சுகாதாரத்துறை கொரோனா அதிகரித்து வரும் சூழலில் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என்ற முக்கிய புள்ளிவிபரத்தையே வெளியிடாத சூழலில்,வெளிப்படைத் தன்மை இல்லாத நிலையில் ஊடகங்கள், அரசியல் கட்சிகள்,பல்வேறு சமூக அமைப்புகள், அறிவுஜீவிகள், மருத்துவ உலகம் அதைப்பற்றி கேள்வி எழுப்பாமல் மௌனம் காப்பது ஜனநாயக அமைப்புக்கு உகந்ததா?

"புரட்சி என்பது உண்மையை தயங்காமல் சொல்வதே"-ஹாவார்ட் ஜின்.

இந்தச் சூழலில் இன்றைக்கு கொரோனா குறித்தான முக்கிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

"பாதி கொள்ளளவு உள்ள மாநகரப் பேருந்தில் 1.30 மணி நேரம்பயணித்து ,36 கி.மீ.கடந்தால், அதில் 40 நிறுத்தங்களில் நின்று,ஒவ்வொரு நிறுத்தத்திலும் 5 பேர் எறி/5 பேர் இறங்கினால், அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் பயணித்தால், அவர் மூலம் 5-9 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர் என சென்னை அண்ணா பல்கலைக் கழகமும்-பாண்டிச்சேரி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தாலோ,பயணதூரம் அதிகமானாலோ,கொரோனா பாதிப்பு அதிகாமாகும் என்ற புள்ளிவிபரமும் தெரிய வந்துள்ளது.

மேலும், ஒன்றுக்கு மேற்பட்ட கொரோனா பாதித்தோர் பேருந்தில் பயணம் செய்தால் பாதிப்பு இன்னமும் அதிகமாகும் என்ற விபரமும் தெரிய வந்துள்ளது.

சென்னையில் மட்டும் ஏறக்குறைய 3500 மாநகரப் பேருந்துகள் இயங்கும் நிலையில், பாதிப்புகள் எந்த அளவிற்கு உயர முடியும் என நினைத்துப் பாருங்கள்.

தமிழ்நாட்டில், சென்னையில் தான் இன்று மிக அதிகமாக 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதும்,சிகிச்சையில் உள்ள நபர்கள் சென்னையில் 100 பேரைத் தாண்டிய நிலையில்,இந்த ஆய்வின் முக்கியத்துவத்தை யாரும் எளிதாக புரிந்து கொள்ளமுடியும்.

(உத்தரப்பிரதேசத்தில் மகளிர் பள்ளி ஒன்றில் ஒரே நாளில் 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.)

தமிழக அரசின் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்காத போக்கை மக்கள் அரசிற்கு உரிய அழுத்தம் கொடுப்பதன் மூலம் மட்டுமே சரிசெய்ய முடியும் என்பதால், ஜனநாயக சக்திகள் அதற்காக குரல் கொடுக்க முன்வர வேண்டும் என மருத்துவர் மரு.வீ.புகழேந்தி தெரிவித்துள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்