Tamil News  /  Tamilnadu  /  Is Gujarat A Beggar's State? - Prime Minister Narendra Modi's Old Tweet Goes Viral

CM Modi: ‘குஜராத் என்ன பிச்சைக்கார மாநிலமா?’ வைரல் ஆகும் பிரதமர் மோடியின் பழைய ட்வீட்!

Kathiravan V HT Tamil
Feb 08, 2024 08:49 AM IST

“Narendra Modi: குஜராத் மக்கள் 60,000 கோடியை அனுப்புகிறார்கள், அதற்கு ஈடாக என்ன திரும்ப வருகிறது? என மோடி கேள்வி எழுப்பி இருந்தார்”

பிரதமர் நரேந்திர மோடியின் பழைய ட்வீட்
பிரதமர் நரேந்திர மோடியின் பழைய ட்வீட்

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், தென் மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக நிதிகள் வட மாநிலங்களுக்கு தரப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதனை தொடர்ந்து கர்நாடகாவுக்கு மத்திய அரசு நிதி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாகவும், கர்நாடகா ஒரு ரூபாய் வரியாக கொடுத்தால் அதில் வெறும் 13 பைசா மட்டுமே மத்திய அரசு தருவதாக கூறி கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இணைந்து டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் நிதி பகிர்வுக்கு எதிராக கேரள அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வெள்ள நிவாரணத்திற்கு இதுவரை ஒரு பைசா கூட வழங்காத மத்திய அரசை கண்டித்து இன்றைய தினம் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாக திமுக எம்.பிக்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளித்து மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, “நாட்டை துண்டாடுவதற்காக வடக்கு, தெற்கு என பிரிவினையை காங்கிரஸ் கட்சி ஏற்படுத்துவதாகவும், எங்கள் வரி, எங்கள் பணம் என்பது போன்ற வார்த்தைகள் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து” என்றும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது பிரதமர் மோடி மத்திய அரசின் வரிப்பகிர்வை கண்டித்து போட்ட ட்வீட் வைரல் ஆகி வருகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அன்று மோடி பதிவிட்ட ட்விட்டில், குஜராத் மக்கள் 60,000 கோடியை அனுப்புகிறார்கள், அதற்கு ஈடாக என்ன திரும்ப வருகிறது?, குஜராத் என்ன பிச்சைக்காரர்கள் மாநிலமா?

2012ஆம் அண்டு, டிசம்பர் 11ஆம் தேதி அன்று, பதிவிட்ட ட்வீட்டில், குஜராத் பிச்சைக்கார மாநிலமா?, நாங்கள் பிச்சைக்காரர்களா?, டெல்லியின் தயவில் வாழ்கிறோமா?, பிரதமரின் மொழி அவர் வகிக்கும் பதவிக்கு உகந்தது அல்ல என பதிவிட்டு இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின், ட்விட்டர் பதிவை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “நாங்கள் ஒரு கூட்டாட்சி நாடு - மாநிலங்களின் ஒன்றியம். இந்த கூட்டாட்சி சுயாட்சியின் முக்கிய தூண் மாநிலங்களின் நிதி உரிமைகள் ஆகும். யூனியனுக்கு மாநிலங்கள் பங்களிக்கின்றன, இதனால் நாம் அனைவரும் கூட்டாக வளர முடியும். ஆனால் யூனியன் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பொறுப்புகளைக் கொண்டுள்ளது. மாநிலங்களுக்கு செலுத்த வேண்டிய நிதி குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மோடியிடம் என்ன சொல்வார்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

WhatsApp channel