Seeman: ’பச்சிளம் குழந்தைக்கு கள் ஊட்டிய கொடுமை!’ சீமானை கண்டு பயப்படுகிறாரா முதல்வர் ஸ்டாலின்? கே.சி.பி சரமாரி கேள்வி!
விழுப்புரம் அருகே கள் விடுதலை மாநாடு நடத்தி மேடையிலேயே தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே கள் அருந்தி போராட்டம் செய்கிற சீமானை கைது செய்யாததன் காரணம் என்ன? என கே.சி.பழனிசாமி கேள்வி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் பருகும் வீடியோ வைரல் ஆகி உள்ள நிலையில், சீமானை கண்டு முதல்வர் பயப்படுகிறாரா என அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
கள் விடுதலை மாநாடு!
தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கங்கள் இணைந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ‘கள் விடுதலை மாநாட்டை’ நடத்தின. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பொது மேடையிலேயே ’கள்’ பருங்கி தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த ஒருவர் பச்சிளம் குழந்தைக்கு கள் ஊட்டும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி விமர்சனங்களுக்கு வித்திட்டு வருகிறது.
சீமான் பேசியது என்ன?
தமிழ்நாட்டை பொறுத்தவரை கள் இறக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பனைமரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், கள் இறக்க அனுமதி தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான் “ஒரு காலம் வரும்….! பதநீர், இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு ஆகியவை தேசிய குடி பானங்கள். இதை நீங்கள் குடித்துதான் ஆக வேண்டும். இதை ரோட்டில் விற்பனை செய்யவிடமாட்டேன். நானே கடையை கட்டி விற்பனை செய்ய வைப்பேன். பனம்பால், தென்னம்பாம்ல் ஆகியவை தமிழ்த்தேசிய மதுபானங்கள்” என பேசினார்.
முதல்வருக்கு கே.சி.பழனிசாமி கேள்வி
சீமானின் இந்த செயல்பாடுகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் இது தொடர்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ள அவர், சீமானை கண்டு பயப்படுகிறாரா முதல்வர் ஸ்டாலின்?
- விழுப்புரம் அருகே கள் விடுதலை மாநாடு நடத்தி மேடையிலேயே தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே கள் அருந்தி போராட்டம் செய்கிற சீமானை கைது செய்யாததன் காரணம் என்ன?
- கள்ளு கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட வேண்டும் இதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய தேதிக்கு தடை செய்யப்பட்டிருக்கிற கள்ளை பொதுவெளியில் ஊடகத்தில் ஒலிபரப்பாகும் வகையில் மேடையில் அருந்துகிற சீமானை கைது செய்ய கையால் ஆகாத அரசாங்கமாக ஸ்டாலின் அரசாங்கம் செயல்படுகிறதா? இதே போல் தடை செய்யப்பட்ட அனைத்து போதை பொருட்களையும் பொதுவெளியில் பயன்படுத்துவதை இந்த அரசாங்கம் அனுமதிக்குமா?
- மிகத் தவறான முன்னுதாரணத்தையும், தன்னுடைய கையாலாக தனத்தையும் வெளிப்படுத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என தெரிவித்து உள்ளார்.
