Karur IT Raid: ’மிட்நைட் மசாலா போல் வருமானவரித்துறையினர் நுழைந்துள்ளனர்’ ரெய்டு குறித்து ஆர்.எஸ்.பாரதி பேட்டி
Senthil Balaji IT Raid: ”ரெய்டு நடத்துவது பற்றி நாங்கள் எந்த காலத்திலும் கவலைப்பட்டது கிடையாது. 1976 எமர்ஜென்சி காலகட்டத்திலேயே ரெய்டு என்றால் என்னவென்று தெரியாத காலத்திலேயே அதனை சந்தித்து முறியடித்து வென்ற இயக்கம் திமுக”
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தி வரும் நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை மத்திய அரசு மிரட்டுகிறது. தமிழ்நாட்டில் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 23ஆம் தேதி சிங்கப்பூர், ஜப்பான் பயணம் சென்றுள்ள நேரத்தில் இதனை திசைத்திருப்பும் வஞ்சக எண்ணத்தோடு அவர் ஊரில் இல்லாத நேரத்தில் ரெய்டை நடத்தி உள்ளர்கள்.
ரெய்டு நடத்துவது பற்றி நாங்கள் எந்த காலத்திலும் கவலைப்பட்டது கிடையாது. 1976 எமர்ஜென்சி காலகட்டத்திலேயே ரெய்டு என்றால் என்னவென்று தெரியாத காலத்திலேயே அதனை சந்தித்து முறியடித்து வென்ற இயக்கம் திமுக.
செந்தில் பாலாஜியை குறிவைக்க காரணம் என்னவெனில் அண்ணாமலை கர்நாடகத்தில் தோல்வியை சந்தித்துவிட்டு தமிழ்நாடு வந்த உடன் கொடுத்த பேட்டியில் ‘பாஜக என்றால் என்ன அதன் அதிகாரம் என்ன என்பதை எல்லாம் இன்னும் 10 நாளில் செந்தில் பாலாஜி சந்திப்பார்’ என்று சொன்னார். 2022 ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கத்துறை பிசியாக உள்ளது, பின்னர் செந்தில் பாலாஜி மீது ரெய்டு நடக்குமென்று சொன்னார்.
அவரை குறிவைக்க காரணம் என்னவெனில் கோவை, கரூர் மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் திமுகவை வெற்றி பெற செய்தார். எனவே அவரை முடக்க வேண்டும் என்பதற்காக அண்ணாமலை திட்டமிட்டு செய்துள்ளார்.
இப்படிப்பட்ட காரியங்களை முதல்வர் இல்லாதபோது செய்வது என்பது பாஜகவின் கேவலமான அரசியலை காட்டுகிறது. ரெய்டு நடப்பதற்கு முன்பாக அந்ததந்த மாநில காவல்துறைக்கு சொல்லி உள்ளூர் காவல்துறையினரை அழைத்துக் கொண்டு ரெய்டுக்கு செல்வதுதான் வழக்கம்.
ஆனால் காவல்துறைக்கு ரெய்டு குறித்த தகவல் இல்லை என்று எஸ்.பியே சொல்லி உள்ளார். வந்தவர்கள் யார் என்பது யாருக்கும் தெரியாது. வருமானவரித்துறை என்றால் எப்படி தெரியும். தற்காப்புக்காக ஏதோ நடந்திருக்கலாம். உடனடியாக செந்தில் பாலாஜியிடம் தொடர்பு கொண்டு பேசினேன்.
திட்டமிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாகி அரசின் மீது கலங்கம் கற்பிப்பதற்காக இந்த ஐடி ரெய்டு நடந்துள்ளது. எத்தனை ரெய்டுகள் வேண்டுமானலும் நடத்துங்கள் அதை பற்றி எங்களுக்கு கவலையில்லை.
கர்நாடக தேர்தலுக்கு பிறகு எல்லா எதிர்க்கட்சிகலும் மிக வேகமாக இணையக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே இதனை சிதைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இது போன்ற ரெய்டுகள் நடத்தப்படுகிறது.
அமலாக்கத்துறை தோன்றிய நாள் முதல் இதுவரையிலேயே நடத்தப்பட்ட ரெய்டுகளில் 0.5 சதவீத வழக்குகளை மட்டுமே குற்றச்சாட்டை நிரூபித்துள்ளார்கள்.
மிட்நைட் மசாலா போல் நைட் வந்து என் வீட்டை கதவை தட்டினால் நான் சந்தேகப்பட வாய்ப்பு இருக்குமா இல்லையா?, வருமானவரித்துறை வாகனம் என்று தெரியாமல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.