"திமுக ஆட்சியில் தொழில்துறை கட்டமைக்கப்பட்ட பிம்பமாக மட்டுமே இருக்கிறது’’ - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
காகிதத்தில் இருந்து காரிடாருக்கும், நிஜமான தொழில் நிறுவனங்களுக்கும், வாக்குறுதிகளை விட்டு உண்மையான பலன்களை நோக்கி முன்னேற வேண்டிய நேரம் இது.

’திமுக ஆட்சியில் தொழில்துறை கட்டமைக்கப்பட்ட பிம்பமாக மட்டுமே இருக்கிறது’’ என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் இன்று எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது.
"தமிழகம் கடந்த பல ஆண்டுகளாக தென்னிந்தியாவின் தொழில்துறை இதயமாக போற்றப்பட்டு வந்துள்ளது. ஆட்டோமொபைல், மின்னணு பொருட்களின் உற்பத்தி முதல், தொழில்துறை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி வரை புதுமை, பொருளாதார உற்பத்தி திறன் ஆகியவற்றின் அடையாளமாக தமிழகம் இருந்து வருகிறது. இந்த புகழையும், பெயரையும் நிலைநிறுத்துவதற்கு தொலைநோக்குப் பார்வை, சிறந்த நிர்வாகம், எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார மீள்தன்மை தேவைப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை முன்பு வழிநடத்தியவன் என்ற வகையில், தற்போதைய திமுக ஆட்சிக்காலத்தில் அதன் முன்னேற்றம் பாதிக்கப்படுவது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனது அரசு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலோட்டமாக பார்க்கும்போது இது மிகப்பெரிய எண்ணிக்கையாக தோன்றலாம். ஆனால் ஆழமாக ஆராய்ந்தால், இதில் பெரிய அளவில் உண்மை இல்லை என்பது புரிந்துவிடும். தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை (DPIIT) மற்றும் ரிசர்வ வங்கியின் 2024 – 24-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டின் தரவுகளின்படி, ஸ்டாலின் அறிவித்ததில் கால் பங்குக்கும் சற்று அதிகமான முதலீடுகள் மட்டுமே தமிழக அரசால் பெறப்பட்டுள்ளன. மற்ற முதலீடுகள் அனைத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மட்டுமே இருக்கின்றன. உண்மையான முதலீட்டுக்கும், முதலீடு செய்வதற்கான அறிவிப்புக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.