Sadhguru : இந்தியாவின் முதல் 'மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' ஜக்கி பிறந்தநாளில் தொடக்கம்!-indias first soil based tiller manufacturing company started on the birthday of sadhguru jakivasudev - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Sadhguru : இந்தியாவின் முதல் 'மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' ஜக்கி பிறந்தநாளில் தொடக்கம்!

Sadhguru : இந்தியாவின் முதல் 'மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' ஜக்கி பிறந்தநாளில் தொடக்கம்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 03, 2024 09:33 PM IST

Sadhguru : ‘‘பனஸ்கந்தாவில் நிலவி வரும் சவாலான மற்றும் வறண்ட சூழலுக்கு இடையே மண்ணின் வளத்தை கூட்டுவதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனம் ஏற்படுத்த போகும் மாற்றம், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள மண் சிதைவுற்ற பகுதிகளுக்கு புத்துயிர் அளிக்கும்’’

Sadhguru : இந்தியாவின் முதல் 'மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' ஜக்கி பிறந்தநாளில் தொடக்கம்!
Sadhguru : இந்தியாவின் முதல் 'மண் சார் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' ஜக்கி பிறந்தநாளில் தொடக்கம்!

காணொளி காட்சியில் ஜக்கி வாழ்த்துரை

இவ்வியக்கத்தினால் உந்தப்பட்டு, அதன் வழிகாட்டுதலில் துவங்கப்பட்டதே “பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்”. இந்நிறுவனத்தை குஜராத் மாநில சட்டமன்றமான விதான் சபாவின் சபாநாயகரும், பனஸ் டெய்ரியின் தலைவருமான சங்கர்பாய் செளத்ரி இன்று துவங்கி வைத்தார். மேலும் அவர் தராத் பகுதியில் ‘பனஸ் மண் பரிசோதனை ஆய்வகம், கிமானாவில் பனஸ் உயிர் உர ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகம் மற்றும் விவசாயிகளுக்கான பயிற்சி கூடத்தையும் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வுக்கு காணொளி மூலம் ஜக்கிவாசுதேவ் அளித்த வாழ்த்து செய்தியில், “குஜராத் மற்றும் பாரதத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக, மண் காப்போம் பனஸ் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தை உருவாக்கி உள்ள பனஸ் டெய்ரியில் உள்ள ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும், ஆசிகளும். இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மக்களுக்கு ஊட்டமளிப்பது மட்டுமின்றி நம் வாழ்வின் ஆதாரமாக விளங்கும் மண்ணுக்கும் ஊட்டமளித்து அதை வளம் கொழிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் செய்யும். நிச்சயமாக FPO-க்கள் பாரதம் மற்றும் கிராமப்புறத்தின் நல்வாழ்விற்கான எதிர்காலமாக திகழ்கின்றன. ஏனெனில் அவை நமது 65% மக்கள்தொகையின் பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துகிறது. சங்கர்பாய் மற்றும் பனஸில் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், ஆசிகளும்’’ எனக்கூறினார். 

இந்த அமைப்பின் நோக்கம் என்ன?

மண் காப்போம் இயக்கம் மற்றும் பனஸ் டெய்ரி இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் சங்கர்பாய் செளத்ரி பேசுகையில், ‘‘இது பனஸ் டெய்ரியின் வழக்கமான தினம் அல்ல. இது ஒரு முக்கியமான நாள். தராத் மற்றும் கிமானாவில் அமைந்துள்ள பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் நாம் ஏற்படுத்தியுள்ள புதிய வசதிகள் நமது நிலையான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்கும். நம்மை தாங்கி நிற்கும் மண்ணை காப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வு மேம்பட தேவையான அறிவு, கருவிகள் மற்றும் ஆதரவை நாம் வழங்குகிறோம்.” எனக் கூறினார்.

இந்நிகழ்வில் மண் காப்போம் இயக்கத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி பிரவீணா ஶ்ரீதர் பேசுகையில் ‘‘பனஸ்கந்தாவில் நிலவி வரும் சவாலான மற்றும் வறண்ட  சூழலுக்கு இடையே மண்ணின் வளத்தை கூட்டுவதிலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் இந்நிறுவனம் ஏற்படுத்த போகும் மாற்றம், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் உள்ள மண் சிதைவுற்ற பகுதிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான உலகளாவிய தரநிலை முன்னுதாரணமாக அமையும்” எனக் கூறினார்.

இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் விவசாயிகளை இணைப்பதற்காக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மண் காப்போம் இயக்கம் தொடர்ந்து களத்தில் இயங்கி வருகிறது. பனஸ் டெய்ரி குழுவுடன் இணைந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு தொடர்ச்சியான கருத்தரங்கங்களை நடத்தியுள்ளது. அதிகம் வறண்ட பகுதியாக அறியப்படும் இந்த தராத் மற்றும் லக்கானி பகுதியில் உள்ள விவசாயிகள் மோசமான மண் வளம், குறைவான நிலத்தடி நீர் மற்றும் மோசமான காலநிலை உள்ளிட்ட பல்வேறு சவால்களை சந்திக்கின்றனர்.

விவசாயிகளின் மகசூல் பெருக வாய்ப்பு

இந்தப் பகுதியில் அளவுக்கு அதிகமான இரசாயன பயன்பாட்டால் மண் வளம் குறைந்துள்ளது. மண்ணின் ஆரோக்கியம் குறித்த துல்லியமான கணக்கீடு இல்லாததால் விவசாயிகள் தேவையில்லாத இரசாயனங்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேவையான ஊட்டச்சத்தை வழங்கவும் தவறி உள்ளனர். இந்த இடைவெளியை சரி செய்ய அதி நவீன மண் பரிசோதனை ஆய்வகம், தொடங்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள முதன்மை ஆய்வகங்கள் சிலவற்றுள் ஒன்றாக மண் குறித்த முழுமையான அறிக்கையை இந்த ஆய்வகம் வழங்கும். இந்த அறிக்கையின் மூலம் விவசாயிகள் தங்கள் மகசூலின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்த சரியான தகவல்களை அறிந்து, தேவையான உரங்களை தேர்வு செய்ய முடியும்.

இதே போல் பனஸ் உயிர் உர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகம், நிலைத்த நீடித்த உரங்களின் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு வழிவகை செய்யும். இந்த ஆய்வகத்தை பார்வையிட்ட விவசாயிகள் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் இரசாயன உரங்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உரங்கள் இங்கே உருவாக்கப்படுவதை நேரடியாக கண்டனர். உயிர் உரங்கள் நிலத்தின் விவசாய உற்பத்தியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மண்ணின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகிறது. 

கிமானாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆய்வகம் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் மண் தன்மைக்கு ஏற்ப இந்த தொழில்நுட்பம் செயல்படும். முதல் கட்டமாக இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 3000 விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கான பதிவுகள் இன்று தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

விவசாய சேவைகள் கிடைக்கும்

மேலும், வரவிருக்கும் பருவ காலத்தில் முதன் முறையாக நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதை குறுகிய கால இலக்காக இந்த நிறுவனம் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் 40-க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருக்கும் 911 விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி குறித்தப் பயிற்சி பல மாதங்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் முதல் வருடத்திற்கான மண் பரிசோதனையை இலவசமாக பெறுவார்கள். மேலும் தொடர்ச்சியான பரிசோதனைகள் அவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும். 

மேலும் விவசாயிகள் ட்ரோன் சேவைகள், பயிர் சார் மண் மேலாண்மை பயிற்சிகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை உள்ளிட்ட பலன்களை பெறுவார்கள். பனஸ் மண் காப்போம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நீண்ட கால இலக்கு, பனஸ்கந்தா மாவட்டம் முழுவதும் விரிவடைந்து அனைத்து விவசாயிகளையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதே ஆகும். இதன் மூலம் விளைநிலங்களின் மண் வளத்தை கூட்டுவது,  விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமின்றி அந்த பகுதியின் உணவு மற்றும் நீர் தேவைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.