’பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திவிட்டதா இந்தியா?’ உடைத்து பேசும் ஜெயரஞ்சன்!
மனித மேம்பாட்டு குறியீடு (HDI) மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளில் (SDG) இந்தியா 140-வது இடத்தில் உள்ளதாகவும், ஆப்பிரிக்க நாடுகள், பங்களாதேஷ், இலங்கை, மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிடத்தக்க நிலையில் இருப்பதாகவும் ஜெயரஞ்சன் சுட்டிக்காட்டினார்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா ஜப்பானை முந்திவிட்டாலும், தனிநபர் வருவாயில் இந்திய மிகவும் பின்னணியில் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் ஜெயரஞ்சன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டின் முயற்சி மற்றும் முன்னேற்றம் குறித்து நடைபெற்ற மன்றத்தில் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் அவர்களின் உரை கவனம் ஈர்த்தது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜப்பானை முந்தியதாகக் கூறப்படுவது குறித்து அவர் ஆழமாக விவாதித்தார். தமிழ்நாடு சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் ஜனநாயகத்தை நோக்கி பயணித்து வருவதாகவும், இது திராவிட இயக்கத்தின் 100 ஆண்டு கால பயணத்தின் விளைவு என்றும் விளக்கினார். இந்த உரையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தமிழ்நாட்டின் முன்னேற்றம், மற்றும் சமூக நீதி ஆகியவற்றை மையப்படுத்தி அவர் பேசினார்.
"இந்தியா-ஜப்பான் பொருளாதார ஒப்பீடு:
ஜெயரஞ்சன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பேசும்போது, இந்தியா ஜப்பானையும் ஜெர்மனியையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) முந்திவிட்டதாகக் கூறப்படுவதை விமர்சனத்துடன் அணுகினார். "இந்தியா நான்காவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால், GDP-யை கணக்கிடுவதற்கு பல முறைகள் உள்ளன. இந்தியாவின் ஒருவர் சம்பாதிக்கும் பணத்தை மட்டும் எடுத்து, மொத்த மக்கள் தொகையை வைத்து பிரித்தால், ஒரு நபருக்கு ஆண்டுக்கு 2,800 டாலர்கள் மட்டுமே வருமானமாகக் கிடைக்கிறது. ஆனால், ஜப்பானின் தனிநபர் வருமானம் 50,000 டாலர்களாகவும், அமெரிக்காவின் தனிநபர் வருமானம் 70,000 டாலர்களாகவும் உள்ளது. இந்த இடைவெளியைப் பார்க்கும்போது, இந்தியாவின் வளர்ச்சி பற்றிய பெருமைகள் உண்மையான மக்கள் நலனை பிரதிபலிக்கவில்லை," என்று அவர் கூறினார்.