INDIA bloc: ’முறிந்ததா INDIA கூட்டணி? திமுகவின் அறிக்கையால் புதிய சர்ச்சை! ’-india bloc dmk backing congress in telangana polls india alliance rift speculation - HT Tamil ,தமிழ்நாடு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  India Bloc: ’முறிந்ததா India கூட்டணி? திமுகவின் அறிக்கையால் புதிய சர்ச்சை! ’

INDIA bloc: ’முறிந்ததா INDIA கூட்டணி? திமுகவின் அறிக்கையால் புதிய சர்ச்சை! ’

Kathiravan V HT Tamil
Nov 21, 2023 08:56 AM IST

”திமுக தனது செய்திக் குறிப்பில் இந்தியா கூட்டணியை குறிப்பிடாமல் மதசாற்பற்ற முற்போக்கு கூட்டணி என குறிப்பிட்டுள்ளது இந்தியா கூட்டணி முறிந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது”

திமுக தனது செய்திக் குறிப்பில் இந்தியா கூட்டணியை குறிப்பிடாமல் மதசாற்பற்ற முற்போக்கு கூட்டணி என குறிப்பிட்டுள்ளது இந்தியா கூட்டணி முறிந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது
திமுக தனது செய்திக் குறிப்பில் இந்தியா கூட்டணியை குறிப்பிடாமல் மதசாற்பற்ற முற்போக்கு கூட்டணி என குறிப்பிட்டுள்ளது இந்தியா கூட்டணி முறிந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது

தெலங்கானா தேர்தல் 2023

தெலங்கானா மாநிலத்தில் வரும் நவம்பர் 30ஆம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கே.சந்திரசேகர் ராவ் முதலமைச்சராக உள்ள பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளை இடையே அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு?

119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநிலத்தில் 2014ஆம் ஆண்டில் 21 இடங்களையும், 2018ஆம் ஆண்டில் வெறும் 19 இடங்களையும் காங்கிரஸ் கட்சி பெற்றிருந்த நிலையில் தற்போது வெளியாகும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு

இந்த நிலையில் தெலங்கானாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபட வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித்தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ”வருகிற 2023 நவம்பர் 30 அன்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும், தெலுங்கானா மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, அக்கட்சி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியா? மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியா?

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ள நிலையில் ’மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டும்’ என திமுக தலைமை கழகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது புதிய கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

குழப்பத்தில் இந்தியா கூட்டணி?

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் தேசிய அளவில் ஒன்றிணைந்து உள்ளனர்.

கடந்த ஜுலை 18ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தங்கள் கூட்டணிக்கு இந்தியா (Indian National Developmental Inclusive Alliance) என்ற பெயரை வைத்து இருந்தனர். இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் 5 மாநிலத் தேர்தலில் தொகுதிப்பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் 5 மாநிலத் தேர்தலில் இந்தியா கூட்டணி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் தேர்தல்களில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்கியது. 

தனித்தனியே போட்டி

மேலும் மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் தங்கள் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து இருந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் வலியுறுத்தியது இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களிடையே இருந்த கருத்து வேறுபாட்டை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக இருந்தது.

முறிந்ததா இந்தியா கூட்டணி?

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அனுக்கமான நண்பனாக இருக்கும் திமுக தனது செய்திக் குறிப்பில் இந்தியா கூட்டணியை குறிப்பிடாமல் மதசாற்பற்ற முற்போக்கு கூட்டணி என குறிப்பிட்டுள்ளது இந்தியா கூட்டணி முறிந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.