INDIA Alliance: ’திமுகவில் காங்கிரஸ்க்கு எத்தனை சீட் தெரியுமா?’ இன்று பேச்சுவார்த்தை! இனிதான் ஆட்டம் ஆரம்பமே!
”Loksabha Election 2024: தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடுகளை நடத்துகிறது. இதற்காக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி குழு ஒன்றை திமுக தலைமை அறிவித்தது”
வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை மார்ச் இரண்டாவது வாரத்திற்குள் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் திமுக இன்று தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்துகிறது.
பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உடன் இணைந்து தேசிய அளவில் ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மாநிலவாரியாக வலுவாக உள்ள கட்சிகள் தலைமையில் தொகுதிப்பங்கீடு நடத்தப்பட்டு தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்படும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளுங்கட்சியான திமுக தொகுதி பங்கீடுகளை நடத்துகிறது. இதற்காக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி குழு ஒன்றை திமுக தலைமை அறிவித்தது.
அதில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா, திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்று மாலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் முதற்கட்ட பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் இணைந்து தேர்தலில் சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 9 இடங்களை அக்கட்சி வென்றது.
திருவள்ளூர், ஆரணி, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, திருச்சி, கரூர், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியானது தேனியைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெறும் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்கள் வரை மட்டுமே தர திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தை சுமூக தீர்வை எட்ட முடியாத நிலையில் 8 இடங்கள் வரை திமுக தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு இருந்தது. அதற்கு முன்னர் நடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 10 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.