Top 10 News: சுத்து போட்ட IT அதிகாரிகள்.. பொங்கல் பரிசுத் தொகுப்பு.. ஆம்னி பஸ் கட்டண உயர்வு - இன்றைய டாப் 10 நியூஸ்!
Top 10 News: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடர்பான செய்திகள் உள்பட டாப் 10 முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
Top 10 News: ஈபிஎஸ் உறவினர்களின் நிறுவனங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை, பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடங்கி வைப்பு, மகளிர் உரிமைத் தொகை வரவு எப்போது உள்ளிட்ட இன்றைய காலை நேரத்துக்கான டாப் 10 செய்திகள் இதோ..!
3-வது நாளாக தொடரும் ஐ.டி.ரெய்டு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் வீட்டில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதேபோல், சென்னை தேனாம்பேட்டை, பூக்கடை, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமானம், மெட்டல் நிறுவனங்களுக்கு சொந்தமான 6-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட ராமலிங்கம் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10ம் தேதியே மகளிர் உரிமைத் தொகை வரவுவைக்கப்பட வாய்ப்பு.வழக்கமாக 15ம் தேதி வழங்கப்படும் நிலையில் பொங்கல் விழாவுக்கு தயாராகும் வகையில் முன்கூட்டியே வரவு வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பதி கூட்ட நெரிசல் விபத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
“திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்த பின், மீண்டும் விசாரணைக்கு எடுத்தது ஏன்? என சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழக மீனவர்கள் 10 பேர் கைது
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து கொண்டிருப்பதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு
சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் சில ஆம்னி பேருந்துகளில் ரூ.4,000 கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேல்மருவத்தூர் பக்தர்கள் 4 பேர் உயிரிழப்பு
ராணிப்பேட்டை சிப்காட் அருகே மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற பேருந்து மீது காய்கறிகளை ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த படுகாயங்களுடன் வாலாஜாபேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குரூப்-4 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட காலிபணியிடங்கள் 2024ல் 6,244 ஆக இருந்தது. 2025ல் குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்துள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு வழங்கப்படுகிறது. இலவச வேட்டி, சேலையும் பொங்கல் தொகுப்புடன் வழங்கப்படுகிறது. இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுகிறார்கள்.
டாபிக்ஸ்