சென்னையில் நடிகர் ஆர்யா வீட்டில் வருமானவரி ரெய்டு! ஆறுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை!
”நடிகர் ஆர்யாவின் குடும்பத்தினர் அண்ணாநகர் பகுதியில் உள்ள சீசெல் உணவக கிளையை நடத்தி வருவதாகவும், இதன் அடிப்படையில் ஆர்யாவின் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன”

நடிகர் ஆர்யா வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல உணவகச் சங்கிலியான சீசெல் உணவகங்களுடன் தொடர்புடையதாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, காண்டாஞ்சாவடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சீசெல் கிளைகளிலும் வருமானவரி துறை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
சோதனையின் பின்னணி
நடிகர் ஆர்யாவின் குடும்பத்தினர் அண்ணாநகர் பகுதியில் உள்ள சீசெல் உணவக கிளையை நடத்தி வருவதாகவும், இதன் அடிப்படையில் ஆர்யாவின் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளா வருமானவரி துறையின் கோரிக்கையின் பேரில், சென்னை வருமானவரி துறை அதிகாரிகள் ஆர்யாவின் ஆழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆறு அதிகாரிகள், போலீஸ் உதவியுடன் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.