Transport Workers: போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை - தமிழக அரசு அறிவிப்பு!
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு, 2023 ஆம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, கடந்த 9 ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் அறிவுரையின்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் போக்குவரத்துக்கு ஊழியர்களுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகைக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதில், ஊழியர்கள் ஆண்டின் கடைசி நாளில் வேலைக்கு வந்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கபடுகிறது.
200 நாட்கள் மற்றும் அதற்கும் மேலாக பணிபுரிந்தவர்களுக்கு 625 ரூபாயும், 151 நாட்கள் முதல் 199 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195-ம், 91 நாட்களுக்கு மேல் 151 நாட்களுக்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு 85 ரூபாயும், 90 நாட்கள் மற்றும் அதற்கு குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்கள் ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்