Inbanithi: ’சேலம் திமுக இளைஞரணி மாநாட்டுக்கு விசிட் அடித்த இன்பநிதி!’ தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
“Salem DMK Youth Conference: கல்லூரி மாணவராக உள்ள இன்பநிதி ஸ்டாலின், கால்பந்தாட்ட வீரராக உள்ளார்”

“தி.மு.க.இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு” மாநில உரிமை மீட்பு முழக்க மாநாடாக, இன்று (21-01-2024) சேலம் – பெத்தநாயக்கன் பாளையத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் தொடக்க நிகழ்வாக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி திமுக கொடியினை ஏற்றி வைத்தார்.
காலை 9.30 மணியளவில், திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் வரவேற்புரையாற்றுகிறார். காலை 9.45 மணியளவில் மாநாட்டின் தலைவராக, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை முன்மொழிதலும் வழிமொழிதலும் நடைபெறுகிறது.
காலை 11.00 மணிக்குத் தொடங்கி, மாலை 6.00 மணிவரை, பல்வேறு தலைப்புகளில் ‘சொற்பொழிவரங்கம்’’ நடைபெறுகிறது.
திருச்சி என்.சிவா எம்.பி., ஆ.ராசா எம்.பி., அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, கம்பம் செல்வேந்திரன், முனைவர் சபாபதி மோகன், திண்டுக்கல் ஐ.லியோனி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர் மதிவேந்தன், கரு பழனியப்பன், எம்.எம்.அப்துல்லா எம்.பி.,மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., மனுஷ்யபுத்திரன், தமிழன் பிரசன்னா, வே.மதிமாறன், கோவி லெனின், வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, வழக்கறிஞர் செ.ம.மதிவதனி உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
மாலை 6.00 மணியளவில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாலை 6.30 மணிக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின், டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்டோர் உரையாற்றும் நிலையில் இறுதியாக இரவு 7.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.
மாநாடு அதிகாரப்பூர்வகாம இன்று தொடங்கினாலும் நேற்று மாலையே மாநாட்டின் நிகழ்வுகள் தொடங்கிவிட்டன. திமுக இளைஞரணி சார்பில் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபச்சுடரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கியது.
நேற்று இரவே திமுகவில் கொள்கைகளை பறைசாற்றும் வகையில் ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரனும், அமைச்சர் உதயந்சிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி கலந்து கொண்டார். அவரை பார்த்த தொண்டர்கள் அவரது அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்றனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
உதயநிதி - கிருத்திகா ஆகியோருக்கு கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு இன்பநிதி, தன்மயா ஆகிய 2 குழந்தைகள் உள்ளார்கள்.
தற்போது கல்லூரி மாணவராக உள்ள இன்பநிதி ஸ்டாலின், கால்பந்தாட்ட வீரராக உள்ளார். தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு கால்பந்தாட்ட போட்டிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார். ஸ்பெயினின் Neroca FC கால்பந்து அணி வீரராகவும் இன்பநிதி ஸ்டாலின் உள்ளதாக கூறப்படுகிறது.
இன்பநிதி ஸ்டாலின் இதுவரை எந்த நேரடி அரசியலிலும் ஈடுபடவில்லை என்றாலும் திமுகவின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் இன்பநிதி ஸ்டாலின் கலந்து கொண்டிருந்தார்.
கடந்த ஜூலை மாதத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய ஹாக்கி போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இன்பநிதி ஸ்டாலின் கலந்து கொண்டது பேசுபொருளானது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் இன்பநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். அவர் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்கில் பேசு பொருளாகி வருகிறது.

டாபிக்ஸ்