‘சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசினார்’ சிறப்பு புலனாய்வு குழுவிடம் பாதிக்கப்பட்ட மாணவி ஒப்புதல் வாக்குமூலம்!
‘சென்னை காவல் ஆணையாளர் அருண் மற்றும் திமுகவினர், ஞானசேகரனை தவிர வேறு யாரும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்று கூறிவந்தனர். இந்த நிலையில் தான்’
அண்ணா பல்கலை கழத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற உத்தரவின் படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர், பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்திய போது, ‘தனது முன்னிலையில் ஞானசேகரனுக்கு அழைப்பு ஒன்று வந்ததாகவும், சார் என்று கூறி, அவரிடம் ஞானசேகரன் பேசினார்’ என்றும் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையின் போது, தன்னுடைய வாக்குமூலத்தில், மாணவி இந்த தகவலை கூறியதாக தொலைக்காட்சி செய்திகளின் ப்ரேக்கிங் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் பூதாகரமான ‘யார் அந்த சார்?’
டிசம்பர் 23 , அண்ணா பல்கை கழக வளாகத்தில் இருந்த மாணவியை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். பிரியாணி கடை நடத்தி வரும் இவர், திமுக உறுப்பினர் என்றும், அமைச்சருக்கு நெருக்கமானவர் என்றும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், மாணவி சம்பவத்தில் மேலும் ஒருவர் இருக்கிறார் என்றும், அவரை போலீசார் காப்பாற்ற முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அஇஅதிமுகவினர், ஒரு படிமேலே போய், ‘யார் அந்த சார்?’ என்கிற பிரசாரத்தையும் தொடங்கியுள்ளனர். இருப்பினும், சென்னை காவல் ஆணையாளர் அருண் மற்றும் திமுகவினர், ஞானசேகரனை தவிர வேறு யாரும் இந்த சம்பவத்தில் தொடர்பில்லை என்று கூறிவந்தனர். இந்த நிலையில் தான், பாதிக்கப்பட்ட மாணவியே, ‘தான் பாதிக்கப்பட்ட போது, சார் என்று கூறி ஞானசேகரன் ஒருவரிடம் பேசியதாக’ சிறப்பு புலனாய்வு குழுவிடம் தெரிவித்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று பெண் ஐபிஎஸ்., அதிகாரிகள் தலைமையில் நடந்து வரும் இந்த சிறப்பு புலனாய்வு குழு, தங்கள் விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.