‘கோர்ட் வாசல் ஏறியும் தீராத பஞ்சாயத்து..’ மனைவி ஜீவனாம்சத்தை சில்லறையாக எடுத்து வந்த ‘நாணய’ கணவன்!
‘பின்னர் நீதிபதியிடம் சென்ற அவர், மனைவிக்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்ச தொகையின் ஒரு பகுதியான, 80 ஆயிரம் ரூபாயை, பொடி சில்லறையாக கொண்டு வந்திருப்பதாக கூறி, இரு பைகளை நீட்டியுள்ளார்’

ஜீவனாம்சத்தை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக மூட்டைகளில் எடுத்து வந்த கணவரின் செயலை கண்டித்த நீதிபதி, அவற்றை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினார். திருமண பந்தத்தில் முறிவுகளும், பிரிவுகளும் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏதோ காரணங்களுக்காக, விவாகரத்து தேடி, இளம் ஜோடிகளும், பல ஆண்டுகளை கடந்த அனுபவ தம்பதிகளும் நீதிமன்ற வாசல் ஏறுவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது.
சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி, பொதுவாழ்வில், பலரும் இந்த கடினமான முடிவுக்கு வருவதை நம்மால் காண முடிகிறது. இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று கவலைப்படும் அளவிற்கு, விவாகரத்துகளும் அதிகரித்துவிட்டது. ஆனால், அந்த விவாகரத்திற்குப் பிறகும், வஞ்சம் தொடர்ந்தால் எப்படி இருக்கும்? என்பதற்கு உதாரணம் தான், இந்த தகவல்.
கோவை நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
கோவை, குடும்ப நல நீதிமன்றத்தில் தம்பதி ஒருவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வழக்கு நடைபெற்று வந்தது. ஒரு கட்டத்தில் வழக்கு நிறைவு கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து, விசாரித்த நீதிபதி, மனைவிக்கு இரண்டு லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு கணவருக்கு தீர்ப்பு வழங்கினார்.
