சீமானுக்கு கொலை மிரட்டல்! இடும்பாவனம் கார்த்தி காவல்நிலையத்தில் புகார்!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூக வலைதளம் வழியாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இடும்பாவனம் கார்த்தி புகார் அளித்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
தேனி சந்தோஷ் என்பவர் மீது புகார்
புகார் மனுவில் குறிப்பிடப்பட்டதாவது, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த 28 ஏப்ரல் அன்று தொடர்ச்சியாக ஸ்டோரி பதிவுகள் ஒன்றில், சீமான் மீது நேரடியான கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த பதிவுகளில் “சீமானின் தலை துண்டாக்கப்படும்”, “விரைவில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்திற்கு இரங்கல் செய்தி வரும்”, “பதவிக்குப் போட்டி நிலவும்” என்ற வகையில் மிகக் கோரமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து இடும்பாவனம் கார்த்தி தனது புகாரில், சீமான் அவர்கள் எந்த இன மக்களையும் இழிவுபடுத்தியதும், அவதூறாக பேசியதும் இல்லையெனவும், மாறாக தெலுங்கு இனத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலரும் நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பாளர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்க, சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களது சமூக ஊடக கணக்குகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.