Annamalai: ’அழகப்பன் பாஜகவில் இல்லை! நான் கௌதமி பக்கம் நிற்கிறேன்’ அண்ணாமலை!
”பாகிஸ்தானை குஷி படுத்த வேண்டும் என்பதற்காக தேசியக் கொடியை உள்ளே விடமாட்டோம், கொடியை குப்பையில் போடுவோம் என்று சொல்வதை ஏற்க முடியாது”
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கலமாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ஜே.பி.நட்டா நியமனம் செய்துள்ள 4 பேர் கொண்ட குழு வரும் 27ஆம் தேதி தமிழகம் வர உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பாஜக தொண்டர்களை கைது செய்து வருகின்றனர். சட்டப்பிரிவு 41ஏ விவரத்தை கொடுக்காமல் பாஜகவினரை கைது செய்கின்றனர். இது குறித்து ஆய்வு செய்து அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தர உள்ளோம்.
கௌதமி அவர்கள் என்னோடு தொடர்பில்தான் இருக்கிறார்கள். கௌதமி அவர்களின் சொத்துகளை 25 ஆண்டுகளாக அவரோடு பணியாற்றிய நபர் ஏமாற்றிவிட்டார் என்று சொன்ன உடனே அவரை தொடர்புகொண்டு சென்னையில் உள்ள உயர் காவல் அதிகாரியின் நேரத்தை வாங்கி தந்தேன். அவரிடம் கௌதமி புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமாக உள்ளது. கௌதமி போலீசில் அளித்த புகார் ஆமை வேகத்தில் சென்று கொண்டு இருக்கிறது. கௌதமி புகார் அளித்த நபருக்கும் பாஜகவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. நான் அவரை பார்த்தது கூட கிடையாது. இந்த பிரச்னையில் நான் கௌதமியின் பக்கம் உள்ளேன்.
சேப்பாக்கத்தில் பாகிஸ்தான் - அப்கானிஸ்தான் போட்டியில் இந்திய தேசியக் கொடியோடு சென்றவர்களை மைதானத்திற்குள் அனுமதிக்கவில்லை. காவல்துறையை சேர்ந்த ஒருவர் தேசியக் கொடியை குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார். பாகிஸ்தானை குஷி படுத்த வேண்டும் என்பதற்காக தேசியக் கொடியை உள்ளே விடமாட்டோம், கொடியை குப்பையில் போடுவோம் என்று சொல்வதை ஏற்க முடியாது. தேசியக் கொடியை மதிக்க தெரியாதவர் ஏன் காவல்துறையில் இருக்க வேண்டும். கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு செய்கிறது.
டாபிக்ஸ்