Kamal Haasan: ’வைரமுத்துவை சந்திக்கும் முன்பே அவரது PRO-ஆக மாறிவிட்டேன்! ’ கமல்ஹாசன்!
”சினிமாவில் நாங்கள் துளைக்கும் போதெல்லாம் வளைந்து கொடுத்து உடையாத நாணலாக எழுதி கொடுப்பார். ஆனால் மகா கவிதை தனக்காக, நமக்காக எழுதியது”
கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மகாகவிதை’ நூலின் முதல் பிரதியை வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், வைரமுத்துவை சந்திப்பதற்கு முன்பே அவரது பி.ஆர்.ஓவாக மாறிவிட்டேன். 40 வருடங்களுக்கு முன்னால் இவரது வரிகளை படித்துவிட்டு இந்த கவிஞர் வேண்டும் என இளையராஜாவிடம் கேட்டபோது ‘நல்லா எழுதுவான் ’ என்று சொன்னார். கண்ணதாசன் ஐயாவை விட ஐந்தோ, அல்லது பத்தோ வயது குறைந்த முதியவரை சந்திக்க போகிறோம் என நினைத்தபோது என் வயதை ஒத்தவர் வந்தார். அதுதான் எனக்கு அறிமுகம்.
சினிமாவில் நாங்கள் துளைக்கும் போதெல்லாம் வளைந்து கொடுத்து உடையாத நாணலாக எழுதி கொடுப்பார். ஆனால் மகா கவிதை தனக்காக, நமக்காக எழுதியது.
இந்த பூமியை பொலிவு கெடாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்கும் கடமை நமக்கு உள்ளது. இது வாடகை வீடு இதில் ஓட்டை போட கூடாது என்கிறார் வைரமுத்து.
இப்போது வரை இந்த பூமியை விட சிறந்த வீடு கிடையாது. இதை பலர் சொல்கிறார்கள்; ஆனால் இதைவிட அழகு தமிழில் இவர்தான் சொல்கிறார் என கமல்ஹாசன் பேசினார்.