BJP : 'தமிழ்ல தானே சொல்றே, இந்தில வேணுனா சொல்லவா' கடுப்பான எல்.முருகன்.. காரணம் இதுதான்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Bjp : 'தமிழ்ல தானே சொல்றே, இந்தில வேணுனா சொல்லவா' கடுப்பான எல்.முருகன்.. காரணம் இதுதான்!

BJP : 'தமிழ்ல தானே சொல்றே, இந்தில வேணுனா சொல்லவா' கடுப்பான எல்.முருகன்.. காரணம் இதுதான்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 27, 2024 10:09 AM IST

கோபத்தோடு பதில் அளித்த எல்.முருகன், செய்தியாளர்களிடம் தமிழ்மொழியில்தானே சொல்கின்றேன், இந்தியில் வேண்டுமானல் சொல்லட்டுமா என ஆவேசத்துடன் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும், நான் வக்கீல் எப்படி கேட்டாலும் ஓரே பதில்தான் வரும் எனவும் தெரிவித்தார்.

'தமிழ்ல தானே சொல்றே, இந்தில வேணுனா சொல்லவா' கடுப்பான எல்.முருகன்
'தமிழ்ல தானே சொல்றே, இந்தில வேணுனா சொல்லவா' கடுப்பான எல்.முருகன்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஞாயிற்று கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திங்கட்கிழமை கோவையில் முக்கிய பிரமுகர்கள் பலர் பா.ஜ.கவில் இணைவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மூத்த நிர்வாகிகள் பாஜகவில் இணைவார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில்  நேற்று காலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், வடகோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனும் மாற்று கட்சியில் இருந்து முக்கிய நபர்கள் இணைகின்றனர் என தெரிவித்தனர். இதனால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் விமான மூலம் கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இன்னும் ஒரு மணி நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து இணைப்பு விழா குறித்து , கட்சியின் மூத்த தலைவர்களுடன் சேர்ந்து பேசுவதாக தெரிவித்து இருந்தார்.

அதே சமயம் பாஜக சார்பில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் மாற்றுக் கட்சியில் இருந்து இணையும் நிகழ்வு மாலை 5.30 மணிக்கு நடத்தப்பட இருப்பதாக பாஜக சார்பில் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாலை 6.40 மணி வரை பா.ஜ.க நிர்வாகிகள் யாரும் அங்கு வரவில்லை. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பதாக சொல்லியிருந்த அக்கட்சித் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்புக்கு வரவில்லை. அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் அரவிந்த் மேனன் , சுதாகர் ரெட்டி , மத்திய இணையமைச்சர், எல். முருகன், பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பாஜக துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் வந்தனர்.

முதலில் பேசிய கே.பி. ராமலிங்கம், கோவையில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்விற்கு கால அவகாசம் தேவைபட்டதாலும், பாதுகாப்பு தேவைபட்டதாலும் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அக்கட்சியின் துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்தார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தர உள்ளார். என் மண் என் மக்கள் யாத்திரை 234 தொகுதிகளிலும் மக்களின் பேராதரவோடு நடந்துள்ளது, பிரதமர் மோடியின் 10 ஆண்டு சாதனையை எடுத்து செல்லும் வகையிலும், திமுக அரசின் தோல்விகளை எடுத்து செல்லும் வகையிலும் இந்த யாத்திரையாக இருந்தது. எந்த அரசியல் கட்சியும் நடத்திடாத வகையில் மிக பிரமாண்டமாக நாளை நிகழ்ச்சி நடைபெறும். பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜக ஆட்சியில் 11 லட்சம் கோடி ரூபாய் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்க உள்ளோம். பிரதமர் மோடி வருகை செய்தி மக்களிடம் சேர வேண்டும்.

மாற்று கட்சியினர் இணைப்பு விழா நிகழ்ச்சி தள்ளி போய் உள்ளது. தமிழ்நாடு வேகமாக வளர காரணம் மோடியின் தனிப்பட்ட அக்கறையே காரணம். பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட காரணங்களால் இணைப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். அனைத்து கட்சியில் இருந்தும் பாஜகவிற்கு வர உள்ளார்கள், மாற்று கட்சியினர் மோடியின் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து அவர்களாக வருகிறார்கள் எனத் தெரிவித்தார்.

இதையடுத்து கட்சியில் இணைய யாரும் வராததால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு இல்லை அது தவறானது என பதிலளித்தார்.

இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்த தொடர் கேள்விக்கு , ஒவ்வொருவராக கேட்டால்தான் பதில் சொல்ல முடியும் என தெரிவித்தார். நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது குறித்து்

கோபத்தோடு பதில் அளித்த எல்.முருகன், செய்தியாளர்களிடம் தமிழ்மொழியில்தானே சொல்கின்றேன், இந்தியில் வேண்டுமானல் சொல்லட்டுமா என ஆவேசத்துடன் தெரிவித்தார். நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நான் வக்கீல் எப்படி கேட்டாலும் ஓரே பதில்தான் வரும் . வந்து இருப்பவர்கள் ஏமாற்றம் அடைவதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என முருகன் தெரிவித்தார். 

நிலைமையை சமாளிக்கும் வகையில் குறிக்கிட்ட வானதி சீனிவாசன், இனி இது தொடர்பாக எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லப்படாது என தெரிவித்தார். இதனைதொடர்ந்து நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மீண்டும் மீண்டும் தெரிவித்த எல்.முருகன் அன்போடு பாசத்தோடு இதை தெரிவித்துக் கொள்வதாக கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.