Dindigul:உடைக்கப்பட்ட பூட்டு..ஒரே இரவில் நூற்றுக்கணக்கான செல்போன்கள் அபேஸ்!
திண்டுக்கல்லில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட செல்போன்களை மர்மநபர்கள் அபேஸ் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திண்டுக்கல் மையப்பகுதியான புதுடென்ஷனர் தெரு பகுதியில் பி.என்.ஜி காம்ப்ளக்ஸில் அமைந்துள்ளது கார்த்திக் மொபைல் சர்வீஸ் நிலையம். திண்டுக்கல் நகர் பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களில் இருந்து வரக்கூடிய வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இந்தக்கடையில் செல்போன்களை சர்வீஸ் செய்வது வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் வழக்கம்போல அதிகாலை கடையை திறக்க கார்த்திக் வந்த போது பூட்டு உடைபட்டு கீழே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
உடனடியாக கார்த்திக் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்த நிலையில் காவல் ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்க்கொண்டனர். தொடர்ந்து போலீஸார் கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர். அதனை தொடர்ந்து சிசிடிவி காட்சி உதவியுடன் கொள்ளையர்களை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து இதுபோன்ற கொள்ளை சம்பவம் திண்டுக்கல் நகர் முழுவதும் அரங்கேறி வருவதால் வணிகர்கள் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
கொள்ளை அடிக்க திட்டமிடும் கொள்ளையர்கள் கொள்ளை அடிப்பதற்கு முன்பாக அந்த கடையையோ அல்லது வீட்டின் முன்பாகவோ குறியீடு போடுவதாக பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.