HT Success story: ’மாட்டு வாலில் இருந்து பணம் கறந்தவர்!’ ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக்கின் வெற்றிக் கதை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ht Success Story: ’மாட்டு வாலில் இருந்து பணம் கறந்தவர்!’ ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக்கின் வெற்றிக் கதை!

HT Success story: ’மாட்டு வாலில் இருந்து பணம் கறந்தவர்!’ ஆச்சி மசாலா நிறுவனர் பத்மசிங் ஐசக்கின் வெற்றிக் கதை!

Kathiravan V HT Tamil
Oct 19, 2023 06:40 AM IST

”சிறிய நகரங்கள் முதல் ஊர்கள் வரை சிறிய மசாலா நிறுவனங்கள் மட்டுமே இந்த சந்தையில் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் அமைப்பு சாரா நிலையில் இயங்கி வரும் மசாலா விற்பனை தொழிலில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை அறிந்தார்”

ஆச்சி மசாலா நிறுவனர் பத்ம சிங் ஐசக்
ஆச்சி மசாலா நிறுவனர் பத்ம சிங் ஐசக்

1980களின் பிற்பகுதியில் இந்தியாவின் முன்னணி பிராண்ட்களில் ஒன்றாக விளங்கும் தனியார் நிறுவனம் ஒன்று ஆண்களின் தலைமுடிகளை கறுப்பாக்கும் ’ஏர் டை’யை அறிமுகம் செய்திருந்தது. 

இந்த ஏர் டையை ஊர் ஊராக சென்று கடைகளுக்கு அறிமுகம் செய்து ஆர்டர் எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத்தில் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவில் பணியாற்றிய ஒரு இளைஞனுக்கு வருகிறது.

நமட்டு சிரிப்பு

தனது உதவியாளர்களுடன் 10 பெட்டி ஏர் டைகளை ஏற்றிக் கொண்டு வெள்ளக்கோயில் எனும் ஊருக்கு சென்ற அந்த இளைஞன், அங்கிருந்த கடை ஒன்றில் தனது நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஏர் டை குறித்தும் அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் விளக்குகிறார். 

அப்போது குறுக்கிட்ட அந்த கடைக்காரர், “இந்த ஊர்ல இருக்கிறவங்க மூஞ்சிக்கு ஷேவிங் கூட செய்ய மாட்டாங்க, எப்படி தல முடிய கறுப்பாக ஏர் டையை வாங்குவாங்க” என்று கூறி நமட்டு சிரிப்பை உதிர்த்தார். 

வெள்ளக்கோயில் மாட்டுச்சந்தை

அதனை கேட்டு மனம்தளராத அந்த இளைஞன் அடுத்த வாய்ப்பை தேடி நகர தொடங்கினார். வெள்ளக்கோயில் மாட்டு சந்தை அந்த வட்டாரத்தில் பிரபலமாக இருந்த நிலையில் அங்கு சென்று அங்குள்ள மாட்டு வாங்க வந்தவர்களிடமும், மாட்டு உரிமையாளர்களிடம் சற்று பேச்சுக் கொடுத்தார்.

மாற்றி யோசித்தால் வெற்றி 

மாடுகளை வாங்க வருவோர் மாடுகளின் பற்கள், உடலமைப்பு உள்ளிட்டவற்றை பார்ப்பதோடு மாட்டின் வால் நிறத்தையும் பார்த்தே மாடுகளை தேர்வு செய்தனர். 

கறுமை நிறம் கொண்ட வால்களை கொண்ட மாடுகளுக்கு மவுசு அதிகம் இருப்பதை புரிந்து கொண்ட அந்த இளைஞன், செம்பட்டை நிற வால்களை கொண்ட மாட்டின் உரிமையாளர்களிடம் தான் வேலை செய்யும் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள புதிய ஏர் டையை அறிமுகம் செய்ததுடன், தன் கையாலேயே அந்த மாடுகளின் வால்களுக்கு ஏர் டையை அடித்து காட்டினார். 

அரை மணி நேரத்திற்குள் செம்பட்டை நிற வால்கள் கருப்பு நிறமாக மாறியதை கண்ட மாட்டின் உரிமையாளர்கள் போட்டா போட்டி போட்டுக் கொண்டு அத்துனை ஏர் டைகளையும் வாங்கி சென்றனர்.

ஷேவிங் செய்யக் கூட ஆர்வம் காட்டாத கிராமத்தில் மாற்றி யோசித்ததன் மூலம் ஏர் டைகள் அத்தனையும் விற்ற அந்த இளைஞர்தான் இன்றைய ஆச்சி மசாலா நிறுவனத்தின் நிறுவனரான பத்மசிங் ஐசக்.

மசாலா தயாரிப்பு

மாத சம்பளத்தில் வாழ்கை நடத்திக் கொண்டிருந்த பத்மசிங் ஐசக்கிற்கு கனவுகள் விரிந்தன. சிறிய நகரங்கள் முதல் ஊர்கள் வரை சிறிய மசாலா நிறுவனங்கள் மட்டுமே இந்த சந்தையில் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் அமைப்பு சாரா நிலையில் இயங்கி வரும் மசாலா விற்பனை தொழிலில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை அறிந்தார். தனது பணியை ராஜினாமா செய்த ஐசக், 1996 ஆம் ஆண்டு தனது மனைவின் உறுதுணையுடன் மசாலா நிறுவனத்தை தொடங்கினார்.

ஆச்சியின் தொடக்கம் 

செட்டிநாடு உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் மரியாதைக்குரிய தாய்மார்களை அழைக்க பயன்படுத்தும் ‘ஆச்சி’ என்ற பெயரில் தனது மசாலா பொருட்களை அறிமுகப்படுத்தினார். 

ஆயிரம் கோடி வருமானம்

ஐசக்கின் தயாரிப்பு சந்தையில் சக்கை போடு போட்ட தொடங்கியது. இன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள 60க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாக்கு மேல் மசாலா பொருட்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.  மாட்டு வால் தொடங்கி மசாலா விற்பனை வரை மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம் என்பது பத்மசிங் ஐசக்கின் தொழில் முனைவு பயணத்தில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய பாடம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.