'FIR எப்படி ரிலீஸ் ஆச்சு? அந்தப் பொண்ண தப்பா காட்ட முயற்சி.. முருகனிடம் முறையிடுவேன்' ஷூவை கழட்டிய அண்ணாமலை!
நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருந்து ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன். ஆரோக்கியமான அரசியல், இனி மரியாதை வெங்காயமெல்லாம் கிடையாது. நாளை எனக்கு நானே சவுக்கால் அடித்து கொள்வேன். தொண்டர்களை செய்ய சொல்ல வில்லை. வீட்டு வாசலில் நின்றார்கள் போதும். மக்கள் கவனத்தை ஈர்க்க வேறு வழியில்லை.

சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு இருக்கும் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் ராஜசேகரன் என்ற திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
அண்ணா பல்கலைக்கழகம் வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை எப்படி யாரால் வெளியிடப்பட்டது? அதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், கைபேசி எண், குடும்ப விவரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்களை வெளியிடக்கூடாது என கூறப்பட்டிருந்தும் காவல்துறையினர் இது போன்று பெண்களுக்கு எதிரான செயல்களை செய்கின்றனர்.
மேலும் மிகவும் மோசமான வகையில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்தில் உரிய சிசிடிவி கண்காணிப்பு கூட பொருத்தப்படவில்லை, ஒரு பெண் மட்டுமல்லாமல் பலரையும் அவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்திருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.
