விஜயகாந்த் நாக்கை துருத்த காரணமானவர்! விஜயகாந்திற்கே விபூதி அடித்தவர்! விசி சந்திரகுமாரின் கட்சித் தாவல்கள்!
2012ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய தேமுதிக கொறடா விசி சந்திரக்குமார், பேசிய பேச்சுதான் ஜெயலலிதா - விஜயகாந்த் இடையே கடந்த காரசார விவாதத்திற்கு காரணமானது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் வி.சி.சந்திரகுமாரின் அரசியல் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.
விஜயகாந்த் நாக்கை துருத்த காரணமானவர்!
2012ஆம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய தேமுதிக கொறடா விசி சந்திரக்குமார், ”உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்ற பின்னர் பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி உள்ளீர்கள். உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு இந்த விலைவாசி உயர்வை செய்து இருந்தால் விளைவு தெரிந்து இருக்கும். மின்சார கட்டணம் உயர்த்துவது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறீர்கள். அது கூட கண் துடைப்புக்காகதான், சட்டமன்ற தொடர் முடிந்த உடன் மின் கட்டணம் உயர்த்தப்படும் என மக்கள் பேசிக் கொள்கிறார்கள்” என சந்திரகுமார் பேசினார்.
வி.சி.சந்திரகுமாரின் இந்த பேச்சு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவை கோபப்படுத்தியதுடன், நேரடியாக எழுது பதில் அளிக்கவும் காரணமாக அமைந்தது. இதனால் ஏற்பட்ட விவாதத்தின் போதுதான் சட்டப்பேரவையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாக்கை துருத்த காரணமாக அமைந்தது.
விஜயகாந்த்திடம் இருந்து பிரிவு
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் வலியுறுத்தினார். தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் சிலருடன் திமுகவிற்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். ‘மக்கள் தேமுதிக’ என்ற தனி அமைப்பை ஏற்படுத்தி, திமுக ஆதரவுடன் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியினார். அத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிடம் தோல்வி அடைந்தார்.