Anna University: கல்லூரிக்குள் குற்றவாளி நடமாட எப்படி அனுமதித்தீர்கள்? அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் சரமாரி கேள்வி!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் தீக்ஷித் ஆகியோர் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், விடுதி காப்பாளர்கள், காவலாளிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

ஏற்கெனவே குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை அண்ணா பல்கலைக்கழகத்தில் எப்படி நடமாடவிட்டார்கள் என தமிழ்நாடு அரசுக்கு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை
டிசம்பர் 23ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்த மாணவி மிரட்டப்பட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
இதை விசாரித்த காவல்துறையினர் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவர் தப்பிக்க முயன்ற நிலையில் தவறி விழுந்ததில் அவரது கை மற்றும் கால்களிலும் எலும்புமுறிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவினர் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில் அரசியல் ரீதியாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.