ADMK BJP Allaiance: ’வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி’ ஈபிஎஸ் முன்னிலையில் அமித்ஷா அறிவிப்பு!
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து உள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக உடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்து உள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதில் பேசிய அமித்ஷா, அனைவருக்கும் பங்குனி உத்தரம் நல்வாழ்த்துகள் என்று கூறி தனது பேச்சை தொடங்கினார்.
பாஜக தலைவர்களும், அதிமுக தலைவர்களும் ஒன்றாக இணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளோம். அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணியின் இதர கட்சிகள் உடன் இணைந்து சந்திப்போம். இந்த தேர்தல் தேசிய அளவில் மோடி அவர்கள் தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியும் தலைமையிலும் நடக்கும்.
1998ஆம் ஆண்டில் இருந்து ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி உடன் அதிமுக கூட்டணி வைத்தது. இது ஒரு இயல்பான கூட்டணி. பாஜக-அதிமுக கூட்டணி சேர்ந்து ஒருமுறை தமிழ்நாட்டில் 30 லோக் சபா இடங்களை கைப்பற்றி உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கேள்வி:- அதிமுக - பாஜக வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையுமா?
நாங்கள் இணைந்துதான், ஆட்சியை அமைப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் கூட்டணி ஆட்சி நடக்கும்.
கேள்வி:- பாஜக எம்.எல்.ஏக்கள் அமைச்சர் ஆவார்களா?
வெற்றி பெற்ற பின் இதற்கான பதிலை தருகிறோம். எங்கள் கூட்டணியை வைத்து திமுக குழப்பம் செய்ய இடம் தர விரும்பவில்லை.
கேள்வி:- பாஜக கூட்டணியில் அதிமுக வைத்த கோரிக்கை என்ன?
அதிமுக தரப்பில் எந்த கோரிக்கையும் இல்லை, இது ஒரு இயல்பான கூட்டணி.
கேள்வி:- டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரும் இக்கூட்டணியில் உள்ளார்களா?
அதிமுகவின் உட்கட்சி விவகாரம், அதில் பாஜக தலையிடப் போவதில்லை.
திமுக மீது ஊழல் புகார்
அமித்ஷா கூறுகையில், "டாஸ்மாக் ஊழலில் 397,775 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. மணல் கொள்ளையில் 5,800 கோடி ரூபாய்க்கு மேல், மின்சாரத் துறை மற்றும் நிலக்கரி மோசடியில் 4,400 கோடி ரூபாய், எல்காட் நிறுவனத்தில் அரசு பங்கு விற்பனை மூலம் 3,000 கோடி ரூபாய், போக்குவரத்து துறையில் 2,000 கோடி ரூபாய், பணமோசடி மற்றும் பணமதிப்பு மாற்றத்தில் 1,000 கோடி ரூபாய், ஊட்டச்சத்து கிட் திட்டத்தில் 450 கோடி ரூபாய், இலவச வேட்டி-சேலை, செம்மண் கடத்தல், மற்றும் மன்ரேகா திட்டத்தில் ஒரு தனிநபருக்கு 45,000 ரூபாய் மோசடி உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் திமுக ஈடுபட்டுள்ளது. இவற்றுக்கு முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்," என்றார்.
மேலும், நீட் தேர்வு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "திமுக, மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவே நீட் உள்ளிட்ட பிரச்சனைகளைப் பயன்படுத்துகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, பொதுவான கருத்தொற்றுமையின் அடிப்படையில் முடிவெடுக்கும். தேர்தல் நேரத்தில் மக்களின் உண்மையான பிரச்சனைகளை முன்னிறுத்துவோம். திமுகவைப் போல கவனத்தைத் திசைதிருப்பும் வேலைகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம்," என்று கூறினார்.
தமிழக மக்களின் உண்மையான துன்பங்களை எடுத்துரைப்பதே தனது நோக்கம் என்று வலியுறுத்திய அமித்ஷா, மக்கள் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம் என்று உறுதியளித்தார்.
