Valentine's day: பேக்கரியில் காதலர் தின ஆஃபர்.. கையில் மாங்கல்ய கயிறுடன் வந்த இந்து முன்னணியினர்!
Valentine's day: அங்கிருந்த இந்து முன்னணியினரிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், சம்மந்தப்பட்ட விளம்பரத்தை அகற்றினால் மட்டுமே சமரசம் என்று அவர்கள் கறாராக கூறினர். இதைத் தொடர்ந்து, பேக்கரியாளரிடம் பேசிய போலீசார், சம்மந்தப்பட்ட காதலர் தின விளம்பரத்தை அகற்ற வைத்தனர்.

Valentine's day: காரைக்குடியில் உள்ள 100 அடி சாலையில், தனியார் பேக்கரி நிறுவனத்தில் காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாங்கல்ய கயிறோடு இந்து முன்னணியினர் திரண்டு வந்ததால், சம்மந்தப்பட்ட விளம்பரம் அகற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள பெஸ்ட் மம்மி என்கிற பெயரில் தனியார் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று காதலர் தினம் என்பதால், சம்மந்தப்பட்ட பேக்கரி சார்பில், காதலர்களை கவரும் விதமாக ஆஃபர் ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இன்று, தங்கள் பேக்கரிக்கு வரும் காதலர்களை வரவேற்கவும், சம்மந்தப்பட்ட பேக்கரி திட்டப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக, தங்கள் கடைக்கு வரும் காதலர்களை ரோசாப்பூ கொடுத்து வரவேற்கவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விளம்பரங்கள், சமூக வலைதளங்களில் பரவலாக வெளியானது. அதற்கு காதலர்கள் தரப்பிலும் வரவேற்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காதல் என்பது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி, சம்மந்தப்பட்ட பேக்கரின் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்து முன்னணியினர், அந்த பேக்கரி முன்பு திரண்டனர்.
இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அக்னி பாலா தலைமையில் திரண்ட இந்து முன்னணியினர், கையில் மாங்கல்ய கயிறுடன் பேக்கரி வாசலில் நின்று கொண்டனர். காதலர்கள் யாராவது வந்தால், அவர்களை மணம் முடிக்க வைப்பது தான் அவர்களின் திட்டம். இந்து முன்னணியினரின் இந்த திடீர் வருகையால், பேக்கரி அமைந்துள்ள பகுதி பதட்டமாக மாறியது. இதைத் தொடர்ந்து, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் அங்கு வந்து சேர்ந்தனர்.
அங்கிருந்த இந்து முன்னணியினரிடம் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், சம்மந்தப்பட்ட விளம்பரத்தை அகற்றினால் மட்டுமே சமரசம் என்று அவர்கள் கறாராக கூறினர். இதைத் தொடர்ந்து, பேக்கரியாளரிடம் பேசிய போலீசார், சம்மந்தப்பட்ட காதலர் தின விளம்பரத்தை அகற்ற வைத்தனர்.
அதன் பின், ‘இது போன்ற விளம்பரத்தை வைக்க கூடாது என்றும், காதலர்களை ஊக்குவிக்க கூடாது’ என்றும் இந்து முன்னணியினர், கடைக்கார்களிடம் வலியுறுத்தினர். கலாசாரத்தை மீறுவதை ஏற்கமுடியாது என்றும் ,அவர்கள் தெரிவித்தனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், அதன் பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
காதலர் தின ஆஃபரை எதிர்த்து, காரைக்குடியின் பிரதான பேக்கரில் இந்து முன்னணியினர் திரண்டு வந்து போராட்டம் நடத்திய சம்பவம், அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த களேபரத்தால், சம்மந்தப்பட்ட பேக்கரியின் வியாபாரம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

டாபிக்ஸ்