வன்கொடுமை துரதிர்ஷ்டமானது.. அடையாள அட்டை இருந்தால் அனுமதி.. அனைத்து இடங்களிலும் மின் விளக்கு.. அமைச்சர் கோவி. செழியன்
- வன்கொடுமை துரதிர்ஷ்டமானது.. அடையாள அட்டை இருந்தால் அனுமதி.. அனைத்து இடங்களிலும் மின் விளக்கு.. அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, பல்கலைக்கழக பின்புற நடைபாதையில் பிரியாணிக்கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக போலீசார் ஞானசேகரனை கைது செய்யும்போது தப்பி ஓடியதால் கீழே விழுந்து இடது கால், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கைதிகளுக்கான வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்த கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அளித்த பேட்டியில், ‘’ நடந்த நேரம் என்பது இரவு 8 மணி. குற்றவாளி என சொல்லப்பட்டிருக்கும் அந்த நபர் அடிக்கடி வந்துபோகும் பழக்கத்தையும் வைத்திருக்கிறார். அதை வாயில் காப்பாளர்கள் சொல்கிறார்கள். முழு விசாரணை நடந்துகொண்டு இருக்கிறது.
மனைவியைப் பார்க்கும் சாக்கில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைந்த ஞானசேகரன்:
அவரது மனைவிகூட, இங்கு நிரந்தரமில்லாத பணியில் இருந்திருக்கிறார். அதனால் சந்தேகப்பட்டு அவரை உள்ளே வராதே எனும் சூழல் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது, பல்கலைக்கழக நேரம் தாண்டி யார் வந்தாலும் உரிய அடையாள அட்டையைக் காட்டி பதிவுசெய்தபின், அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் அனுமதிக்கச் சொல்லியிருக்கிறோம். வாகனங்களில் வந்தால் கூட அதை சிசிடிவியில் பதிவுசெய்து, வாகன எண்ணை பதிவுசெய்து பெற வேண்டும் என்று கடுமையாக சொல்லியிருக்கிறோம். இதனை நியாயப்படுத்தவிரும்பவில்லை. துரதிர்ஷ்டவசமாக நடந்தது நடந்ததுதான். குற்றத்தைக் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க அரசு துணை நிற்கும் என்பது தான் செய்தி.
சிசிடிவி 80 விழுக்காடு பொருத்தப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடம் சிசிடிவி பொருத்தப்படாத முட்புதர் போன்ற பகுதி. எந்த இடமும் இருட்டாக இருக்கக் கூடாது என்பதற்கு துரித நடவடிக்கை எடுத்திருக்கிறோம். அனைத்துப் பகுதிகளிலும் மின் ஒளி பொருத்தப்பட்டு, சிசிடிவி குறைபாடுகள் நீக்கப்படும் என்பதைத் தெளிவாக சொல்லியிருக்கிறோம்’’ என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
திடீர் திருப்பம்:
அண்ணா பல்கலைக்கழக மாணவியை மிரட்டும்போது ஞானசேகரனை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் யார் என்பது குறித்தும், கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் செல்போன் அழைப்புகளை பட்டியலிட்டும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஞானசேகரன் உடன் ஒருவர் வந்ததாக மாணவி புகார் அளித்திருந்த நிலையில் அந்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த செல்போன் எண்களை சேகரித்து சைபர் க்ரைம் போலீசாரும் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். அந்த நபர் யார்?, அவருக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியான மாணவியின் அடையாளங்கள்:
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி பெயர், முகவரியுடன் எஃப்ஐஆர் வெளியானதால் சர்ச்சை எழுந்தது. அதைத்தொடர்ந்து மாணவியின் அடையாளங்கள் வெளியில் தெரியாதபடி இணையதளங்களில் முடக்கப்பட்டன.
டாபிக்ஸ்