I Periyasamy: ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  I Periyasamy: ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி

I Periyasamy: ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி

Pandeeswari Gurusamy HT Tamil
Published Feb 26, 2024 10:41 AM IST

வீட்டு வசதி வாரிய விடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஐ.பெரியசாமி, கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வீட்டு வசதி வாரிய அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதாக கடந்த 2012-ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.

வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “ அமைச்சர் ஐ பெரியசாமியை விடுவித்து உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தார். மேலும் ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 26 ஆம் தேதிக்குள் எம்பி மற்றும் எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் வரும் மார்ச் 28ஆம் தேதிக்குள் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒரு லட்ச ரூபாய் காண பிணைதொகை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்ட ஆனந்த் வெங்கடேசன் வரும் ஜூலை மாதத்திற்குள் விசாரணையை முடித்து உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்றும் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி ஆகியோருக்கு எதிரான முக்கிய வழக்குகளில் முதலில் நீதிமன்றத்தால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும், இந்த வழக்குகளின் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய சூமோட்டோ எனப்படும் தாமாகா முன்வந்து விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எடுத்துக் கொண்டுள்ளார். 

இருப்பினும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சூமோட்டோ வழக்குகளை எந்த நீதிபதி விசாரிக்க வேண்டும் என்பதைச் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி முடிவு செய்வார் என உத்தரவிட்டார். அதன் பிறகு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தொடர்ந்து இந்த சூமோட்டோ வழக்குகளை விசாரித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வழக்கு விசாரணையின் போது "வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர். ஒவ்வொரு வழக்கிலும், விசாரணையை யாரும் எதிர்கொள்ள விரும்பவில்லை. நான் இது போன்ற வழக்குகளில் ஆழமாகச் செல்லும்போது இன்னும் அதிகமான வழக்குகள் வெளியே வருகிறது. கீழமை நீதிமன்ற செயல்களை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது" என்று நீதிபதி ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.