தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Helicopter: சாத்தான் குளம் காட்டில் அனுமதியின்றி தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. விசாரணையை தொடங்கிய காவல்துறை

Helicopter: சாத்தான் குளம் காட்டில் அனுமதியின்றி தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. விசாரணையை தொடங்கிய காவல்துறை

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 16, 2023 04:28 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசின் அனுமதி இன்றி சட்ட விரோதமாக ஹெலிகாப்டர் தர இறங்கிய விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹெலிகாப்டர் (கோப்புப்படம்)
ஹெலிகாப்டர் (கோப்புப்படம்) (Pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அம்பலசேரி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை மர்மமான முறையில் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. அதிலிருந்து இறங்கிய நபர் சொகுசு கார் மூலம் அந்தப் பகுதி முழுவதும் அடைக்கப்பட்டிருந்த ஒரு செட்டுக்குள் சென்றார். அங்கு தனியார் நிறுவனம் ஒன்றை அமைப்பதற்காக சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் இந்தியா மற்றும் அமெரிக்க நாட்டின் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தது.

மேலும் அப்பகுதியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் வந்து இறங்கியது தெரிந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

திடீரென தங்கள் பகுதியில் ஹெலிகாப்டர் வந்து இறங்கியதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகினர். இச்சம்பவம் தொடர்பாக கட்டாரி மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் வேல் முருகன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அடித்துள்ளார்.

அந்த புகாரில் எந்தவித அரசு அனுமதி இன்றி மாவட்ட ஆட்சியரின் உத்தரவும் இன்றி அந்த ப் பகுதியில் ஹெலிகாப்டர் வந்து தரை இறங்கியது. அந்த பகுதியில் அனுமதி இன்றி விளம்பர பேனர் வைக்கப்பட்டது. மேலும் எந்தவித அரசு அனுமதியும் இன்றி பேனரில் ஆட்சியர் லட்சுமிபதி சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரின் புகைப்படத்தை பேனரில் அச்சிட்டு இருந்தது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

புகாரை பெற்றுக் கொண்ட சாத்தான்குளம் காவல்துறையினர் புகார் மனு ஏற்பு சான்றிதழையும் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் சாத்தான்குளம் அருகே ஹெலிகாப்டர் தரையிறங்கியது குறித்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்